Published : 15 Nov 2017 08:51 AM
Last Updated : 15 Nov 2017 08:51 AM

ஐயப்ப உடையுடன் கூடிய பக்தர்களின் புகைப்படத்துடன் ‘அஞ்சல் தலையில் எனது தலை’ சபரிமலை அஞ்சலகத்தில் முதன்முறையாக இன்று அறிமுகம்

சமீபகாலமாக இணையதளம், கொரியர், தொலைபேசி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்ததால் அஞ்சல் நிலையங்கள் மூலமான கடித தொடர்பு சுருங்கிப் போனது. இதனிடையே, கடிதப் போக்குவரத்துக்கு பயன்படும் அஞ்சல் தலைகளில் பெரும் தலைவர்கள் படம் மட்டுமே இடம்பெறுகிறது. இந்நிலையில், அஞ்சல் நிலையங்களுக்கு இளம் தலைமுறையினர், பொதுமக்கள் வரும் நிலையை உருவாக்க ‘மை ஸ்டாம்ப்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, உயிரோடு இருப்பவர்களின் புகைப்படம் அஞ்சல் தலைகளில் இடம்பெறும்.

இது மட்டுமல்லாமல் பிரசித்தி பெற்ற கட்டிடங்கள், தேவாலயங்கள், மசூதி உள்ளிட்ட அனைத்து மதத்தினரின் ஆலயங்களையும் மை ஸ்டாம்பின் மூலம் அஞ்சல் தலைகளாக போடலாம். இது நடப்பு ஆண்டிலிருந்து முதன் முறையாக சபரிமலை அஞ்சலகத்திலும் இன்றுமுதல் அமல்படுத்தப்பட உள்ளது. சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு வருவோர் ஐயப்ப உடையிலேயே இதற்கு புகைப்படம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய விருது பெற்ற ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் நா.ஹரிஹரன் கூறும்போது, “கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சர்வதேச அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி நடந்தது. அதில் வைத்துத் தான் முதன்முதலில் மை ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.5 மதிப்புள்ள 12 அஞ்சல் தலைகளுக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்ததால் 2012-ல் கட்டணம் ரூ.300 ஆக உயர்ந்தது.

சபரிமலைக்கு விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் இந்த சேவை வழங்கப்படும். அதிலும் பாரம்பரியமான ஐயப்ப மாலை உடையில் இதை எடுக்க முடியும். இது சபரிமலைக்கு வந்து சென்றது குறித்தான பசுமையான நினைவாகவும் இருக்கும். இதற்கென சபரிமலை அஞ்சல் நிலையத்தில் 2 பேர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆதார் அட்டை எடுக்கும் போது இருந்த நடைமுறையை போலவே, கணினியோடு சேர்ந்து இருக்கும் கேமராவின் மூலம் புகைப்படம் எடுத்து விடுவார்கள். இதில் ஒருவருக்கு அதிகபட்சம் பத்து நிமிடத்தில் ஸ்டாம்ப் தயாராகி விடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x