Published : 01 Aug 2023 08:18 PM
Last Updated : 01 Aug 2023 08:18 PM

குருகிராமில் 14 கடைகளுக்கு தீவைப்பு: நூ மாவட்டக் கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதால் பதற்றம்

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று (ஜூலை 31) நடந்த மத ஊர்வலம் கலவரத்தில் முடிந்த நிலையில், அது தற்போது அருகிலுள்ள குருகிராமின் பாட்ஷாபூருக்கும் பரவியுள்ளது. பாட்ஷாபூரில் பிரதான சந்தையில் 14 கடைகள் சூறையாடப்பட்டன. இன்று பிற்பகலில் திடீரென பாட்ஷாபூருக்குள் பைக்குகள் மற்றும் எஸ்யுவி வாகனங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். பிரியாணி கடைகள் மற்றும் பிற உணவகங்களையே அவர்கள் பெரும்பாலும் குறிவைத்து தாக்கினர். செக்டார் 66-ல் 7 கடைகளுக்கு தீ வைத்தனர்.

அந்தக் கும்பல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் கடைகளை மட்டுமே குறிவைத்து சூறையாடி அழித்ததோடு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களோடு மசூதியின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாட்ஷாபூர் சந்தை மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) குருகிராம் செக்டார் 57-ல் ஒரு கும்பல் மசூதிக்கு தீ வைத்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

குருகிராம் காவல் துணை ஆணையர் நிஷாந்த் யாதவ் கூறுகையில், "நூ பகுதியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சோனா பகுதியில் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்தாலும் இன்று நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குருகிராமில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளோம்" என்றார்.

இதற்கிடையில் முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், "கலவரம் தொடர்பாக இதுவரை 44 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 70 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். ஹரியாணா போலீஸுக்கு உதவியாக 16 கம்பெனிகள் மத்தியப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. நூ பகுதியில் முழுவதும் இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறுகையில், "அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்குமாறு அரசு வேண்டுகிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.

கலவரத்துக்குக் காரணம் என்ன? - பஜ்ரங் தள ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ காரணமாக இந்தக் கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது. பஜ்ரங் தள உறுப்பினரான மோனு மனேசர் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சர்ச்சை வீடியோவை சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் இந்த மோனு மனேசர். இவர் யாத்திரையின் போது தானும் மேவாட் பகுதிக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x