Published : 01 Aug 2023 08:40 AM
Last Updated : 01 Aug 2023 08:40 AM
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் மூன்று காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என ஷாஹாபூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தானேவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி? சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணியின் ஒரு பாகமாக தானேயின் ஷாஹாபூரின் சர்லம்பே கிராமத்திற்கு அருகில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைக்க பயன்படும் மொபைல் கேன்ட்ரி கிரேன் எனப்படும் கிரேனை வைத்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாரா இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப்படை வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அவர்களுடன் ஷாஹாபூர் தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் திறந்துவைத்த நாக்பூர் - ஷீரடி சாலை: மும்பை மற்றும் நாக்பூர் என இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் சம்ருத்தி விரைவுச்சாலை போடப்பட்டு வருகிறது. 701 கி.மீ நீளமுள்ள இச்சாலை நாக்பூர், வாஷிம், வார்தா, அகமதுநகர், புல்தானா, அவுரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக் மற்றும் தானே உள்ளிட்ட 10 மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த விரைவுச்சாலையின் முதல் கட்டம் நாக்பூரை கோயில் நகரமான ஷீரடியுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பணிகள் முடிந்து, பிரதமர் மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
விசாரணைக்கு உத்தரவு: விபத்து தொடர்பாக புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தப் பணிகளைச் செய்துவந்தது.
விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்." என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT