Published : 01 Aug 2023 07:23 AM
Last Updated : 01 Aug 2023 07:23 AM
புதுடெல்லி: பிரதமர் மோடியின் தீவிர முயற்சிகளால் அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்த கோயிலை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்டகோயில்கள் அழகுபடுத்தப்பட்டன. வாரணாசியின் கங்கைநதி படித்துறைகள் புனரமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது கோயில் வளாகம் பிரம்மாண்டம் ஆக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வாரணாசிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:
சிராவண மாதத்தில் 12 ஜோதிர் லிங்கங்களுக்கு பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக வாரணாசி, அயோத்தி, மதுரா, உஜ்ஜைன் உள்ளிட்ட புனிதத் தலங்களில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக வாரணாசிக்கு ஓராண்டில் 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதன் மூலம் அந்த நகரின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 2 பேர், சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அண்மையில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டனர். அனைத்து தரப்பினரையும் இந்தியா அரவணைக்கிறது. இது நமது நாட்டின் தனிச் சிறப்பு. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT