Published : 01 Aug 2023 07:37 AM
Last Updated : 01 Aug 2023 07:37 AM

கடத்தப்பட்ட எனது மகன் அப்பாவி, அவனை விட்டுவிடுங்கள்: தீவிரவாதிகளுக்கு ராணுவ வீரரின் தாய் உருக்கமான வேண்டுகோள்

கடத்தப்பட்ட ஜாவைத் அகமது வானியின் வீடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவரை விட்டுவிடுமாறு அவரது தாயார் தீவிரவாதிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாவைத் அகமது வானி (25). இந்திய ராணுவத்தில் ரைஃபில்மேன் ஆக, லடாக்கில் பணியாற்றி வந்தார். மொகரம் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த இவர், நேற்று திங்கட்கிழமை பணிக்கு சென்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், அகமது வானி கடந்த சனிக்கிழமை மாலை சில பொருட்கள் வாங்க அருகில் உள்ள சவல்காம் கிராமத்துக்கு தனது காரில் சென்றார். ஆனால் இரவு 8.30 வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடினர். இந்நிலையில் பரன்ஹால் என்ற கிராமத்தில் ஒரு பழத்தோட்டத்துக்கு அருகில் அவரது கார் மட்டும் நின்றிருந்தது. காரின் கதவுகள் திறந்திருந்த நிலையில், சந்தையில் வாங்கிய பொருட்கள் அதில் இருந்தன. மேலும் காரில் ரத்தக்கறையும் இருந்தது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளால் அகமது வானி கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கு அகமது வானியின் தாயார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “எனது மகன் ஓர் அப்பாவி இளைஞன். தயவுசெய்து அவனை விட்டுவிடுங்கள். அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று வானியின் தாயார் கூறியுள்ளார்.

அகமது வானியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள் வந்து அவரது பெற்றோரை சந்தித்தனர். அகமது வானி பத்திரமாக வீடு திரும்புவான் என் நம்பிக்கையூட்டினர்.

தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் இதற்கு முன்னரும் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 மார்ச்சில் சமீர் அகமது மல்லா என்ற ராணுவ வீரரை லஷ்கர் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொன்றனர். பட்காமில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் அவரது உடல் இருந்தது.

2021-ல் ஷோபியானை சேர்ந்த ஷாகிர் மன்சூர் வாகே என்ற ராணுவ வீரரின் உடல், குல்காம் பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வாகே கடத்தப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 2017, மே மாதம், லெப்டினன்ட் உம்மர் ஃபயஸ் என்ற அதிகாரி, குடும்பத் திருமணத்தில் பங்கேற்பதற்காக விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில் ஷோபியானில் நடந்த விழாவில் இருந்து 4 தீவிரவாதிகளால் உம்மர் ஃபயஸ் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x