Published : 01 Aug 2023 08:31 AM
Last Updated : 01 Aug 2023 08:31 AM
புதுடெல்லி: வரலாற்று தவறை உணர்ந்து முஸ்லிம்கள் கியான்வாபியை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் வளாகத்தை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கோயிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. இதனால் இந்த மசூதியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி இந்துக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
மசூதியின் வெளிப்புற சுவரில்உள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசனம் செய்யக் கோரும் வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதில் தற்போது மசூதியினுள், இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் சார்பில் அகழாய்வு நடத்தும் வழக்கில் ஆகஸ்ட் 3-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த சூழலில் கியான்வாபி விவகாரம் குறித்து உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, “கியான்வாபியை நாம் மசூதி என அழைத்தால் அது விவாதத்திற்கு உரியதாகி விடும். மசூதியினுள் திரிசூலங்களுக்கு என்ன வேலை? அவற்றை நாங்கள் உள்ளே வைக்கவில்லையே! ஜோதிர்லிங்கமும் உள்ளே இருக்கிறது. அதன் சுவர்களில் தோற்றமளிக்கும் தேவி, தேவதைகளின் சிலைகள் கூக்குரலிட்டுக் கூறுவது என்ன? இதன் மீதான சமாதானம் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து வரவேண்டும். வரலாற்று தவறை உணர்ந்து முஸ்லிம்கள் கியான்வாபி மசூதியை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்றார். இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் கருத்தை பாஜகவின் தோழமை அமைப்பினர் வரவேற்றுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் கூறும்போது, “உபி முதல்வர் கூறியபடி உள்ளே இந்து கடவுள்களின் சிலைகளும், ஜோதிர்லிங்கமும், திரிசூலமும் அமைந்த இடத்தை மசூதி என்று எப்படி கருதமுடியும்?” என கேள்வி எழுப்பினார்.
வழக்கின் இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஹெயின் கூறும்போது, “முதல்வர் யோகி கூறியபடி, முஸ்லிம்கள் அந்த இடத்தைஇந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் சமாதானப் பேச்சிற்கும் இடமில்லை. இதை முஸ்லிம்கள் ஏற்கவில்லை எனில், எங்கள் உரிமையை நீதிமன்றத்தில் பெற தொடர்ந்து முயற்சி செய்வோம்” என்றார்.
5 வேளை தொழுகை: முதல்வரின் கருத்துக்கு சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமாஜ் வாதி எம்.பி. எஸ்.டி.ஹசன் கூறும் போது, “கடந்த 350 வருடங்களாக அன்றாடம் 5 வேளை தொழுகை நடைபெறும் இடத்தை மசூதி என்று அழைக்காமல் என்னவென்று அழைப்பது? 350 வருடங்களுக்கு முன் முறையான சட்டம் ஒழுங்கு இல்லை. ராஜா, மகராஜாக்களின் ஆட்சி நிர்வாகம் இருந்தது. இவர்களது வாய்மொழி உத்தரவுகளால் சட்டங்கள் அமலாகின. அவ்வாறு அவுரங்கசீப்பால் நிலம் ஒதுக்கப்பட்டு இந்த மசூதி கட்டப்பட்டது. உ.பி. மக்கள் அனைவருக்குமான முதல்வர் இவ்வாறு பேசுவது தவறு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT