Published : 24 Nov 2017 08:56 AM
Last Updated : 24 Nov 2017 08:56 AM
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை, பத்ம குளத்தில் நடைபெற்ற பஞ்சமி தீர்த்தவாரி புனித நீராடும் விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
அலர்மேலு மங்கை, பத்மாவதி என பக்தர்களால் போற்றப்படும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற இந்த பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பத்ம குளம் மண்டபம் அருகே சிறப்பு திருமஞ்சன சேவைகள் நடைபெற்றன. அதன் பின்னர் காலை 11.48 மணிக்கு குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில், பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அப்போது அங்கு கூடி யிருந்த சுமார் 2 லட்சம் பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா எனும் பக்த கோஷத்துடன் புனித நீராடினர். முன்னதாக திருமலையில் இருந்து அதிகாலை 4 மணியளவில் பத்மாவதி தாயாருக்கு வழங்க பட்டுப்புடவை, மஞ்சள், குங்குமம், நகை, பிரசாதம் உள்ளிட்ட சீர் வரிசைகள் யானை மீது ஊர்வலமாக திருச்சானூருக்கு கொண்டு வந்து வழங்கப்பட்டது.
பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவஸ்தானம் சார்பில் இலவச உணவு, குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பத்மாவதி தாயார் கோயிலில் புஷ்பயாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT