Published : 31 Jul 2023 03:30 PM
Last Updated : 31 Jul 2023 03:30 PM

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன: அனுராக் தாக்குர் விமர்சனம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் ஓடுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி நிலவிய நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியது: "மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். எனவே, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாடாளுமன்றத்துக்குள் பிரச்சினைகளை எழுப்பாமல் வீதியில் கோஷமிடுவது சரியா? அப்படியானால், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்ன பயன்?

நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து ஓட வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் வந்தது? விவாதத்தில் பங்கேற்காமல் ஓடிவிட்டு, அதற்கான காரணத்தை எதிர்க்கட்சிகள் தேடுகின்றன. அவர்களுக்கு வெளியே ஓடுவதில்தான் நம்பிக்கை இருக்கிறது; விவாதத்தில் இல்லை. அவர்கள் செய்தியில் இடம்பெற விரும்புகிறார்கள். ஆனால், விவாதத்தில் பங்கெடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் அவர்கள் அரசியல் செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள், அதேபோல், வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கும் செல்ல வேண்டும். மணிப்பூருக்கு ஆளும் கட்சி எம்பிக்களும் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி இருக்கிறார். மணிப்பூருக்கு 21 எம்பிக்களோடு சென்ற அவர், மேற்கு வங்கத்துக்குச் செல்லாதது ஏன்? மேற்கு வங்கம் செல்வதற்கு அவர்களுக்கு அச்சமாக இருக்கிறதா? காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமே வழங்கியதால், மேற்கு வங்கத்தை அந்த கட்சி கை கழுவிவிட்டதா?" என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

முடக்கம் ஏன்? - நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவாகரம் குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியின் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், குறுகிய நேரத்தில் மட்டுமே விவாதிக்க தயார் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x