Published : 31 Jul 2023 12:30 PM
Last Updated : 31 Jul 2023 12:30 PM

“அரசால் முடியாவிட்டால் மக்களிடம் ஒப்படையுங்கள்” - கேரள சிறுமி இறுதி ஊர்வலத்தில் ஒலித்த குரல்கள்

ஆலுவா: கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட 5 வயது சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சிறுமியின் இறுதிச் சடங்கு கீழ்மாடு கிராமப் பஞ்சாயத்து பொது மயானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, தைக்காட்டுக்கரா பள்ளியில் சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில்தான் சிறுமி ஒன்றாம் வகுப்பு பயின்றுவந்தார். இதனால், சிறுமியை கடைசி ஒருமுறை பார்ப்பதற்காக அதிகாலை முதலே பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

சிறுமியின் உயிரற்ற உடலைக் கண்ட சக மாணவர்கள், ஆசிரியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் பலரும் , குற்றவாளிக்கு எதிரான தங்களின் கோபமான மனநிலையை வெளிப்படுத்தினர். சிறுமியுடன் படிக்கும் மாணவியின் தாய் ஒருவர், "குற்றம்சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்து அவருக்கு உணவளிப்பது நீதியாகாது" என்று கோபமாக பேசினார்.

இதேபோல், "சிறுமியை கொன்றது போல் குற்றவாளியையும் கொல்ல வேண்டும், அரசு அதனை செய்ய முடியாவிட்டால் பொதுமக்களிடம் குற்றவாளியை ஒப்படைத்து விடுங்கள். இவ்வாறான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதற்காக தனிகொள்கைகளை வகுக்க வேண்டும்" என்றும் அஞ்சலி செலுத்த வந்த பெண்கள் ஆவேசமாக கோபத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர், சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கீழ்மாடு கிராமப் பஞ்சாயத்து பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர்.

நடந்தது என்ன? - கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிஹார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்துவந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸார் சிறுமியைத் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அலுவாவில் சதுப்புநிலப் பகுதியில் ஒரு சாக்குப் பையில் அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவரைக் கைது செய்த கேரள போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அசாஃபக் அலாம்.

சம்பவ தினத்தன்று, சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, ஆலுவா மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அசாஃபக். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்தவர்கள், இந்தக் குழந்தை யார் என அசாஃபக் அலாமிடம் சிலர் கேட்டுள்ளனர். அவர்களிடம் தனது மகள் என்றும், மார்க்கெட் பகுதியை சுற்றிக் காட்டுவதாகவும் கூறி, அலாம் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் மாலை 7 மணியளவில் சிறுமியை காணவில்லை என பிஹார் புலம்பெயர் தொழிலாளர் தம்பதியினர் ஆலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில், மது போதையில் சுற்றித் திரிந்த குற்றவாளி அசாஃபக் அலாமை போலீஸார் கண்டுபிடித்தனர். முதலில் சிறுமி பற்றி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து அசாஃபக், மறுநாள் காலைபோதை தெளிந்ததும் சிறுமியை கடத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டதோடு, சிறுமியின் உடலை வீசிய இடத்தை காட்டியிருக்கிறார். அதன்படி, பெரியார் நதிக்கரை ஓரத்தில் உள்ள ஆலுவா மார்க்கெட் குப்பை கிடங்கில் இருந்து சிறுமியின் உடல் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன. உடலின் அருகே 3 கற்களும் இருந்தன. உடல் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

குற்றவாளி அசாஃபக் அலாம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வசித்த அதே கட்டிடத்தின் மேல் தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் குடிவந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சிறுமிக்கு நேர்ந்த அவலம் குறித்து கேரள போலீஸார் எக்ஸ் தளத்தில், "மன்னித்துவிடு மகளே (Sorry daughter) என்று தெரிவித்துள்ளது.

மேலும், “வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு புகார் வந்தவுடன், நாங்கள் தீவிர விசாரணையைத் தொடங்கினோம். சிறுமியை உயிருடன் பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. எனினும், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்பட்டார். விரைவாக கைதும் செய்யப்பட்டார். சிறுமியை உயிருடன் பெற்றோரிடம் கொண்டு வர முடியாமல் போனது உங்களைப் போலவே ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் வேதனை அளிக்கிறது. ஏனென்றால் நாங்களும் பெற்றோர்கள்” என்றும் கேரள போலீஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x