Published : 31 Jul 2023 09:05 AM
Last Updated : 31 Jul 2023 09:05 AM
புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த அர்பித் ஜெய்ஸ்வால் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், “வினோத் ஜா என்பவர் தனது மகன்கள் நரேந்திர ஜா மற்றும் சதேந்திர ஜா ஆகியோருடன் என் வீட்டுக்கு வந்தார். ஒரு அரசியல் கட்சி வேட்பாளரின் சார்பில் போர்வை வழங்கப்பட இருப்பதாகவும் அதற்காக அடையாள ஆவணம் தருமாறு என்னிடம் கேட்டனர். அப்போது நான் வேறுகட்சியைச் சேர்ந்தவன் என கூறினேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்கள் எங்கள் குடும்பத்தினரை தாக்கினர். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இதுபோல, வினோத் ஜா என்பவர் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் சார்பில் போர்வை வழங்குவதற்காக அடையாள ஆவணம் சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஜெய்ஸ்வால் குடும்பத்தினர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர்” என கூறப்பட்டிருந்தது.
இந்த இரு வழக்குகளையும் நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் கடந்த 24-ம் தேதி நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:
இரு குடும்பத்தினரும் எவ்வித கட்டாயமோ அச்சுறுத்தலோ இன்றி, தன்னிச்சையாக தங்களுக் கிடையிலான பிரச்சினையை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள னர். எனவே, இந்த இரு குடும்பத்தினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்கல் செய்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.
எனினும், இந்த இரு குடும்பத்தினர் இடையிலான எதிர்மறை சிந்தனை மாற அவர்கள் சமுதாய சேவை செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். அந்த இரு குடும்பத்தினரும் தங்களுடைய பகுதியில் தலா 200 மரங்களை நட்டு அவற்றை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.
இந்த உத்தரவு செயல்படுத் தப்பட்டதா என்பது குறித்து வரும் நவம்பர் மாதம் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் எந்த இடத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து அந்த 2 குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரி தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT