Published : 02 Nov 2017 07:35 PM
Last Updated : 02 Nov 2017 07:35 PM
டெல்லி அரசின் அமைச்சர்கள் குழு அனுப்பியுள்ள முன்மொழிவுகள், மக்கள்நலத் திட்டங்களுக்கான கோப்புகளை டெல்லி துணைநிலை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திராசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
“துணைநிலை ஆளுநர் கருத்து வேறுபாடுகள் இருந்தால் விஷயத்தை குடியரசுத்தலைவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்” என்று சந்திராசூட் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு மேற்கொண்ட 9 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன் அமர்வில் வியாழனன்று விசாரணை நடைபெற்றது. அதாவது துணை நிலை ஆளுநருக்கு டெல்லியப் பொறுத்தவரை முழுக்கட்டுப்பாடு உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 4, 2016-ல் அளித்த தீர்ப்பின் மீது கேஜ்ரிவால் அரசு மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தது. அதாவது துணைநிலை ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உதவியும், ஆலோசனையையும் பெறாமல் தன்னிச்சையாக அரசை நடத்த முடியுமா என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு:
“துணைநிலை ஆளுநருக்கு குடியரசுத்தலைவரை விட, பிற மாநில ஆளுநர்களை விடவும் அதிக அதிகாரம் உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது” என்று டெல்லி அரசுக்காக வாதாடிய வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கூறினார்.
அரசியல் சாசனச்சட்டப்பிரிவு 239ஏஏ-யின் உட்பிரிவு 4-ன் படி சட்டமன்றம் இயற்றும் சட்டங்களில் துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அவர் அமைச்சர்கள் குழு உதவியும் ஆலோசனையும் வழங்கலாம் என்றே கூறுகிறது என்று சுட்டிக்காட்டினார் கோபால் சுப்பிரமணியம்.
மேலும் வேறுபாடுகள் இருந்தால் துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும், அங்கு தாமதமானால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசர முடிவுகளையும் துணைநிலை ஆளுநர் எடுக்க முடியும் என்று இந்தச் சட்டப்பிரிவு வலியுறுத்துவதாக அவர் மேலும் தன் வாதத்தை எடுத்து வைத்தார்.
நீதிபதி தீபக் மிஸ்ரா, பொது ஒழுங்கு, போலீஸ், தலைநகர் நிலங்கள் குறித்த விவகாரம் நீங்கலாக டெல்லி அரசு துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனை, உதவிகள் செய்யலாம் என்றார். ஆனால் தோற்றநிலை வாசிப்பில் துணைநிலை ஆளுநருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே உள்ளது என்றார்.
மேலும் நீதிபதி அசோக் பூஷன், டெல்லி அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு துணநிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டிய தேவையில்லை என்றார்.
அப்போது கோபால் சுப்பிரமணியம் குறுக்கிட்டு, டெல்லி துணை நிலை ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். இதன் மூலம் ஆட்சி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார், அதாவது முனிசிபல் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் முதல் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கும் மக்கள்நலத் திட்டங்கள் இதனால் ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது என்றார்.
‘தானே உயர்ந்தபட்ச சட்டம் என நினைக்கிறார் துணைநிலை ஆளுநர்’
“துணை நிலை ஆளுநர் ஒரு 6 அடிப்படைகளில் தன்னையே வானாளவிய அதிகாரம் படைத்தவராகக் கருதிகிறார், அவையாவன 1. டெல்லி இன்னமும் யூனியன் பிரதேசமே. 2. நாடாளுமன்றம் டெல்லிக்கென்றே சட்டப்பிரிவு 246(4)-ன் கீழ் சட்ட உருவாக்கியுள்ளது. 3. அரசியல் சாசனச் சட்டம் 239ஏஏ டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்ற நிலையில் மாற்றம் எதையும் பிரேரணை செய்யவில்லை. 4.சட்டப்பிரிவு நிபந்தனை அவருக்கு எதையும் தடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. 5. டெல்லி அரசின் ஒவ்வொரு முடிவும் இவரது ஒப்புதலைப் பெறவேண்டும். 6. தானே சுயேச்சையாக முடிவெடுக்க முடியும். இந்த 6 அடிப்படைகளில்தான் அவர் தன்னை அதிகாரம் படைத்தவராக கருதுகிறார், இப்போது கூறுங்கள் 69வது அரசியல் சாசன சட்டத்திருத்தம் 2 இணை அரசுகளை ஒரு மாநிலத்தில் அனுமதிக்கிறதா?” என்று வாதாடினார் கோபால் சுப்பிரமணியம்.
இதற்கு, நீதிபதி ஏ.கே.சிக்ரி, “ஆகவே தினசரி நிர்வாகம், சட்ட அமலாக்கம் ஆகியவற்றில் தானே தலைவர் என்கிறார் துணைநிலை ஆளுநர் இல்லையா” என்றார். இதற்குப் பதில் அளித்த கோபால் சுப்பிரமணியம், “அதோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அவர் உண்மையில் டெல்லி அரசு கணக்கிலேயே வராது என்றல்லவா கருதுகிறார், அவர்கள் காலில் விழ வேண்டும் என்று நினைக்கிறார்” என்றார்.
இந்த கடைசி வார்த்தை குறித்து எச்சரித்த நீதிபதி பூஷன், சட்டப்பிரிவு 239ஏஏ என்பதை மட்டுமே பேச வேண்டும் என்றும் நடைமுறை நிகழ்வுகளை குறிப்பிட வேண்டாம் என்றார், இதற்கு கோபால் சுப்பிரமணியம், அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் ஜூனியரை மேற்கோள் காட்டி, “சில வேளைகளில் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை கோர்ட் சுட்டுவது அவசியம்” என்றார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “துணைநிலை ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உண்மையானதாக இருக்க வேண்டும்” என்று ஏற்றுக் கொண்டார்.
“ஆம், வெறுமனே அரசை முடக்குவதாக இருக்கக்கூடாது. டெல்லி அரசின் செயல் நிர்வாகம் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களை செயல்படுத்துவதோடு நின்றுவிடும் ஒன்றல்ல, குழந்தைகள், ஏழைகள் ஆகியோருக்காக திட்டங்கள் தீட்ட வேண்டியுள்ளது. ஆனால் ஆளுநர் தினப்படி ஆட்சி நிர்வாகம் வரை தலையிடுகிறார். நாட்டில் வேறு எங்கும் இப்படி நடப்பதில்லை.
நாடாளுமன்ற மேட்டிமை குறித்து நாங்கள் பேசவில்லை. இருப்பினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுவதற்கான இடம் வேண்டும் என்றே கோருகிறோம். நாங்கள் செய்யும் அனைத்திற்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை” என்றார் கோபால் சுப்பிரமணியம்.
வழக்கு விசாரணை மேலும் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT