Published : 30 Jul 2023 04:03 PM
Last Updated : 30 Jul 2023 04:03 PM
திருவனந்தபுரம்: 5 வயது சிறுமி ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக கேரள போலீஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கேரள போலீஸார் வெளியிட்ட பதிவில், 'மன்னித்துவிடு மகளே' என்று பதிவிட்டுள்ளனர். இந்தப் பதிவு வைரலாகி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
நடந்தது என்ன? கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிஹார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்துவந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸார் சிறுமியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை அலுவாவில் சதுப்புநிலப் பகுதியில் ஒரு சாக்குப் பையில் அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் குறித்து கேரள போலீஸார் எக்ஸ் தளத்தில், "மன்னித்துவிடு மகளே (Sorry daughter) என்று தெரிவித்துள்ளது. "குழந்தையை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. குழந்தையைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி. விவேக் குமார் இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்துள்ளோம். அந்த இளைஞர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வசித்த அதே கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். முதலில் அந்த இளைஞரிடம் உண்மையைப் பெறுவதில் சிக்கல் இருந்தது. அந்த நபர் குடிபோதையில் இருந்தார். பின்னர் அந்த நபருக்கு போதை தெளிந்தவுடன் விசாரணை நடைபெற்றது. அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்" என்றார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
മകളേ മാപ്പ്#keralapolice pic.twitter.com/cCY3boF8hM
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT