Published : 30 Jul 2023 05:23 AM
Last Updated : 30 Jul 2023 05:23 AM
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். அப்போது, ஹரியாணா மாநிலம் சோனிபட் மதினா கிராம பெண் விவசாயிகளை சந்தித்தார்.
அப்போது, ‘‘நாங்கள் டெல்லியை இதுவரை பார்த்ததே இல்லை’’ என்று ராகுல் காந்தியிடம் அந்த பெண்கள் கூறினர். அப்போது, ‘‘நான் உங்களை டெல்லிக்கு வரவழைக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். அதன்படி, மதினா கிராமத்து பெண் விவசாயிகளுக்கு டெல்லியின் எண் 10 ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டில் ராகுல் காந்தி விருந்தளித்தார். அப்போது சோனியா, பிரியங்கா காந்தி மற்றும் பெண்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கலந்துரையாடினர்.
அந்தப் பெண்களிடம், ‘‘உணவு நன்றாக இருக்கிறதா, பிடித்திருக்கிறதா?’’ என்று ராகுல் கேட்டறிந்தார். அவர்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்கு ராகுல் சாக்லேட்டுகள் வழங்கினார்.
இதுகுறித்து ராகுல் கூறும்போது, ‘‘பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஹரியாணா பெண் விவசாயிகள், அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை எங்களுக்கு அளித்தனர். எங்களை மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நடத்தினார்கள். தங்களுடைய குடும்ப உறுப்பினர்களைப் போல எங்களிடம் பாசம் காட்டினார். டெல்லியை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை மட்டும்தான் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் நான் செலுத்தும் பிரதிபலன் இது. அவர்களுக்கு நான் கடன் பட்டுள்ளேன். அதை எப்படி திருப்பி செலுத்தாமல் இருக்க முடியும்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஜிஎஸ்டி.யால் அவர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். அரசு கொள்கைகள் தொடர்பாக பேசுகின்றனர். எங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி ஆர்வமாக கேட்டு சிரித்தார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இந்த கலந்துரையாடலின் போது சோனியா காந்தியைப் பார்த்து ஒரு பெண், ‘‘ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதற்கு, ‘‘ராகுலுக்கு பெண் பாருங்கள்’’ என்று சோனியாவும் சிரித்தபடியே கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராகுல், ‘‘அது நடக்கும்’’ என்று கூறியதும் அனைவரும் மனம்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
பிரியங்கா காந்தி கூறும்போது, ‘‘குழந்தையாக இருக்கும் போது, ராகுல் காந்தி நிறைய குறும்புகள் செய்வார். அவரை கண்டிக்காமல் என்னைத்தான் அதிகமாக திட்டுவார்கள்’’ என்று கூறினார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT