Last Updated : 30 Jul, 2023 06:07 AM

6  

Published : 30 Jul 2023 06:07 AM
Last Updated : 30 Jul 2023 06:07 AM

தேர்தலை குறிவைத்து பாஜக நிர்வாகிகள் மாற்றம் - காங்கிரஸ் தலைவரின் மகன், 2 முஸ்லிம்கள் உட்பட 38 பேருக்கு முக்கிய பதவி

அனில் அந்தோனி

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை குறிவைத்து பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினரான காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி மற்றும் 2 முஸ்லிம்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 38 புதியவர்கள் பட்டியலில் 13 தேசிய துணைத் தலைவர்கள், 13 தேசிய செயலாளர்கள், 8 பொதுச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் அமைப்புசெயலாளர், இணை அமைப்புசெயலாளர், தேசிய பொருளாளர் மற்றும் துணைப் பொருளாளர் தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 38 பேர் பட்டியலில்10 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 13 துணைத் தலைவர்களில் 5 பேரும், 13 தேசிய செயலாளர்களில் 5 பேரும் பெண்களாக உள்ளனர்.

பாஜக முதன்முறையாக முஸ்லிம் வாக்குகளை இந்தமுறை குறி வைத்துள்ளது. இதற்காக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணவேந்தர் தாரீக் மன்சூர், கேரளாவின் அப்துல்லா குட்டி ஆகியோர் தேசிய துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பேராசிரியர் தாரீக் மன்சூருக்கு ஏற்கெனவே உ.பி. மேல்சபை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.யைசேர்ந்த மாநிலங்களவை எம்.பி.ராதா மோகன் அகர்வாலும் தேசியப் பொதுச் செயலாளராகி உள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஓருவரான ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பான தேசிய செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவருடன், துணைத் தலைவர் பதவி பெற்றுள்ள அப்துல்லா குட்டியும் கேரளா சிறுபான்மையினர் இடையே பாஜகவிற்கு வாக்குகள் பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கர்நாடக பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி, அசாம் எம்.பி. திலீப் சாக்கியா ஆகியோர் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பிஹார் எம்.பி. ராதா மோகன் சிங், தேசிய துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாபிற்கு புதியமாநிலத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் டி.புரந்தரேஸ்வரி அம்மாநில பாஜக தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த இவர், கடந்த 2014-ல் பாஜகவில் இணைந்தார்.

தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய், தேசிய பொதுச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதனால் காலியான தெலங்கானா பாஜக தலைவர் பதவியில் மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அமர்த்தப்பட்டுள்ளார்.

தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்திரா, பாஜகவின் தேர்தல் நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்கிறார். ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுனில்ஜாக்கர் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு மாநில பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, அம்மாநில பாஜக தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் அதிருப்தி காட்டி வந்த பங்கஜ் முண்டேவுக்கு தேசிய செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் பாஜக தேசிய நிர்வாக அமைப்பில் மேலும் ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து செய்யப்பட்டுள்ளன. இதில் பதவி நீக்கப்பட்ட தலைவர்கள் பலருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x