Published : 30 Jul 2023 05:31 AM
Last Updated : 30 Jul 2023 05:31 AM

மணிப்பூரில் கும்பலால் தாக்கப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு உடனடி உதவி தேவை - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்

இம்பால்: மணிப்பூரில் கும்பலால் தாக்கப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி இனக் கலவரம் மூண்டது. மறுநாள் தலைநகர் இம்பாலில் பாஜக எம்எல்ஏ உங்ஜாகின் வால்டே ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். என்றாலும் அவர் குணமடைய நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் படுத்த படுக்கையாக இருக்கும் அவர், உணவு உட்கொள்வது, கழிப்பறை செல்வது, குளிப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கடந்த 23-ம் தேதி முதல் மணிப்பூரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், பாஜக எம்எல்ஏ உங்ஜாகின் வால்டேவை சந்தித்தார்.

இதையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஸ்வாதி மாலிவால் எழுதியுள்ள கடிதத்தில், “மணிப்பூரில் பாஜக எம்எல்ஏ உங்ஜாகின் வால்டே கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். எலெக்ட்ரிக் ஷாக் தரப்பட்டதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். அவரை பாஜக முக்கியத் தலைவர்களோ அல்லது அமைச்சர்களோ இதுவரை சந்திக்கவில்லை. அவரது சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் நகலை ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். எம்எல்ஏ வால் டேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • பாலரத்னா

    உள்துறை அமைச்சரின் பயனற்ற விஜயத்தின் போது கூட அவரை சந்தித்ததாக செய்திகள் ஏதும் வரவில்லையே. மணிப்பூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு தான் மனம் இல்லையென்றாலும் தனது கட்சியை சார்ந்த எம்எல்ஏ படு மோசமான நிலையில் தாக்கப்பட்டிருக்கும் போது அவரை கூட சந்திக்க மறுப்பது பாஜகவினரின் மனித நேயமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

  • பிரபாகர்

    பாஜகவுக்கு உள்ளே பாகுபாடு....

 
x
News Hub
Icon