Published : 29 Jul 2023 06:03 PM
Last Updated : 29 Jul 2023 06:03 PM
புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் வெளிநாட்டு சக்தியின் பங்கை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் ராணுவத் தளபதி நரவனே, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு சீனா உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், "உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அண்டை நாடுகளில் நிலையற்ற தன்மை இருந்தாலும் சரி, நமது எல்லை மாநிலங்களில் நிலையற்ற தன்மை இருந்தாலும் சரி, அது நமது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு கேடானது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டத் தேவையான சிறந்த நடவடிக்கைகளை பொறுப்பில் இருப்பவர்கள் நிச்சயம் எடுப்பார்கள். இதில், இரண்டாவது கருத்து தேவையில்லை.
மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு உள்ள தொடர்பை நிராகரித்துவிட முடியாது. நிச்சயமாக சீனாவின் பங்கு இருக்கிறது. அங்குள்ள பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுக்கு சீனா உதவுகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல ஆண்டுகளாக சீனா உதவி வருகிறது. அந்த உதவி தொடர்ந்து இருந்து வருகிறது என்றே நான் நம்புகிறேன்.
இந்த வன்முறையால் பலனடைபவர்கள் அமைதி திரும்ப விரும்ப மாட்டார்கள். அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் மணிப்பூரில் வன்முறை தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். எனினும், அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT