Published : 29 Jul 2023 04:33 PM
Last Updated : 29 Jul 2023 04:33 PM
புதுடெல்லி: ‘ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைய்யுங்கள்’ எனக் கூறிய ஹரியாணா பெண் விவசாயிடம், ‘நீங்கள் அவருக்கு பொருத்தமானப் பெண்ணாக பாருங்களேன்’ என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
தனது சமீபத்திய ஹரியாணா பயணத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹரியாணா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பெண் விவசாயிகள் சிலர் சமீபத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் அவரது தாயார் சோனியா காந்தி வசித்து வரும் 10 ஜன்பாத் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "சில சிறப்பு விருந்தினர்களுடன் எனக்கு, அம்மாவுக்கு, பிரியங்காவுக்கு மறக்க முடியாத நாள். சோனிபட்டைச் சேர்ந்த விவசாய சகோதரிகள் சில டெல்லி வந்தனர். அவர்களுடன் சில பரிசு பொருள்களையும், வேடிக்கைப் பேச்சையும் கொண்டு வந்தனர். உள்ளூர் நெய், இனிப்பு லஸ்ஸி, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் அப்புறம் நிறைய அன்பு என நாங்கள் விலைமதிப்பில்லா பரிசு பொருள்களை சேர்ந்து பெற்றோம்" என்று தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அந்தச் சந்திப்பின்போது ஹரியாணாவைச் சேர்ந்த பெண் விவாசாயி ஒருவர், "ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைய்யுங்கள்" என்று கூறுகிறார். அதற்கு "அவனுக்கு பொருத்தமான பெண்ணாய் பாருங்களேன்" என்று சோனியா காந்தி, அப்பெண்ணுக்கு பதில் சொல்கிறார். இந்த உரையாடலில் இடைபுகுந்த ராகுல் காந்தி "அது (திருமணம்) கண்டிப்பாக நடக்கும்" என்று கூறுகிறார்.
பெண்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "ராகுல் பார்க்க இனிமையாக இருக்கிறார் இல்லையா? அவர் என்னைவிட மிகவும் குறும்பானவர். என்னை அதிகம் திட்டுவார்" என்கிறார்.
ஜூலை 8-ம் தேதி ஹரியாணா மாநிலத்தின் சோனிபட்டில் உள்ள மதீனா என்ற கிராமத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடி நேரம் செலவளித்தார். அவர்களுடன் வயல்களில் வேலை செய்தார். அப்போது, அந்த விவசாயிகள் தலைநகருக்கு மிக அருகில் தாங்கள் வசித்தாலும் இதுவரை டெல்லியை பார்த்ததில்லை என்று கூற, அவர்களை டெல்லிக்கு அழைப்பதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.
‘ராகுல் காந்தி விவசாய சகோதரிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தர். விவசாய சகோதரிகள் டெல்லி வந்தனர். ராகுலின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது’ என்று காங்கிரஸ் கட்சி அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे - देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT