Published : 28 Jul 2023 05:57 PM
Last Updated : 28 Jul 2023 05:57 PM

மணிப்பூர் ஆய்வுக்குப் பின் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம் - ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு

புதுடெல்லி: மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக நாளை அம்மாநிலம் செல்ல உள்ள எதிர்க்கட்சி எம்.பி.கள், ஆய்வுக்குப் பிறகு அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் எம்.பி.க்கள் குழு நாளை மணிப்பூர் செல்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுஷ்மிதா தேவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் மஹூவா மாஜி, திமுக சார்பில் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் வந்தனா சவான், ராஷ்ட்ரிய லோக் தளம் சார்பில் ஜெயந்த் சவுத்ரி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே. பிரேமசந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் ஆகியோர் கொண்ட குழு மணிப்பூர் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் குழு மணிப்பூரில் பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்குச் செல்வது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பது, அவர்களின் குறைகளைக் கேட்டறிவது, நிலைமையை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுரவ் கோகாய், "மணிப்பூரில் எல்லாம் சரியாக உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. அங்கு இன்னமும் வன்முறை தொடர்கிறது.

மாநில அரசு எப்படி தோல்வி அடைந்தது, அதிக அளவில் மக்களுக்கு எப்படி ஆயுதங்கள் கிடைத்தன, அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். 100 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பைரன் சிங் ஒப்புக்கொண்டிருக்கிறார். 2 மாதங்களாக அரசு ஏன் தூங்கிக் கொண்டிருந்தது என்பது குறித்தெல்லாம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் சென்று உண்மை என்ன என்பதை அறிந்து அதனை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிப்போம்" எனக் குறிப்பிட்டார்.

மணிப்பூர் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, "எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு சனிக்கிழமை காலை மணிப்பூர் செல்லும். என்னென்ன தவறுகள் அங்கே நடந்தன, அங்கு ஏற்பட்ட உயிர் சேதம், பொருட்சேதம் எவ்வளவு என்பதை கண்டறியும்" என தெரிவித்தார்.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சித் தலைவர் பிரேமசந்திரன் கூறுகையில், "மணிப்பூரில் நிகழ்வுகள் தொடர்பாக முதற்கட்ட தகவல்களை திரட்டுவதே பயணத்தின் முக்கிய நோக்கம். அங்கு தற்போதும் வன்முறை நடக்கிறது. மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பது தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்துக்கு முன்பாக அரசுக்கு பரிந்துரைகளை நாங்கள் அளிப்போம்" என தெரிவித்தார். மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் நடந்து வரும் இனக்கலவரம் காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x