Published : 28 Jul 2023 05:51 AM
Last Updated : 28 Jul 2023 05:51 AM

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா பதவியில் தொடரலாம்: செப்டம்பர் 15 வரை அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, செப்டம்பர் 15-ம் தேதி வரை பதவியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சஞ்சய் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2020 நவம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடியவும், மீண்டும் அது நீட்டிக்கப்பட்டது.

விதிப்படி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரையிலேயே நீட்டிக்க முடியும். இந்நிலையில், அவர்கள் 5 ஆண்டுகள் வரையில் பதவியில் தொடரலாம் என்று மத்திய அரசு 2021-ம் ஆண்டு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.

இதன் தொடர்ச்சியாக, மீண்டும் அவரது பதவிக்காலம் 2023 நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. சஞ்சய் மிஸ்ராவுக்கு தொடர்ந்து பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 11-ம் தேதி இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்ட விரோதமானது என்று கூறி ,அவர் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு பதவியில் தொடரக்கூடாது என்று உத்தரவிட்டது.

தற்போதைய சூழலில், சஞ்சய் மிஸ்ரா பதவியில் தொடர்வது அவசியம் என்று கூறி குறைந்தபட்சம் அவரது பதவிக்காலத்தை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.

பண மோசடி மற்றும் தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்டவற்றை தடுப்பதற்கான சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (எஃப்ஏடிஎஃப்) மதிப்பீடு நடைபெற்றுவரும் நிலையில் சஞ்சய் மிஸ்ரா பதவியில் தொடர்வது அவசியம். இல்லையென்றால், அது நாட்டு நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி ஆர் காவி, விக்ரம் நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு, “நாட்டு நலன் கருதி அவரது பதவிக்காலத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கிறோம். ஆனால், அதன் பிறகு அவரது பதவிக்காலம் ஒருபோதும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தது.

மேலும், “அமலாக்கத் துறையில் வேறு திறமையான அதிகாரிகள் இல்லை என்ற சித்திரத்தை இது ஏற்படுத்துகிறது” என்று சஞ்சய் மிஸ்ராவை மத்திய அரசு முன்னிலைப்படுத்துவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x