Published : 28 Jul 2023 06:12 AM
Last Updated : 28 Jul 2023 06:12 AM

மணிப்பூர் வீடியோ விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் ஆடையின்றி இழுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக மைதேயி இனத்தவருக்கும், குகி, நாகா பழங்குடியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மே 4-ம் தேதி நடைபெற்ற வன்முறையில் ஒரு கும்பல் பழங்குடியினப் பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்ற வீடியோ அண்மையில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான தகவல்களைப் பெறும் வகையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மீது கார்கே குற்றச்சாட்டு: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசாமல் வெளியில் அரசியல் பேச்சு நடத்தி ஜனநாயகத்தை களங்கப்படுத்துகிறார்.

எதிர்க்கட்சிகளுக்கு பெயர் சூட்டி அழைப்பதன் மூலம் மோடி அரசின் தவறுகளை அழித்துவிட முடியாது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களால் மட்டுமே கருப்பு ஆடைகளை கேலி செய்ய முடியும். அதை பாஜகவினர் செய்கின்றனர்.

மணிப்பூர் நிலவரத்தை இருளில் வைத்திருப்பதன் மூலமும், சர்வாதிகார அணுகுமுறையை கடைபிடிப்பதன் மூலமும், பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்புவதன் மூலமும் பாஜக தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது. நாடாளுமன்ற வரலாற்றில் இதைவிட இருண்ட காலகட்டம் இருந்ததில்லை. மக்கள் இதனை நன்கு அறிந்துள்ளனர். இதற்கு எதிராக அவர்கள் போரிடுவார்கள்.

மணிப்பூர் பற்றி எரிவது நாட்டின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் ஆகும். மணிப்பூரில் 85 நாட்களாக கதறும் மக்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. மத்திய அரசு மனிதநேயத்தின் மீதான கறையாகும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x