Published : 27 Jul 2023 06:34 PM
Last Updated : 27 Jul 2023 06:34 PM

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மொஹரம் ஊர்வலம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மொஹரம் ஊர்வலம் நடந்தது.

இஸ்லாமியர்களில் ஷியா பிரிவினர் மொஹரம் ஊர்வலம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும், ஜம்மு காஷ்மீரில் மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த வந்த தடை தற்போது நீக்கப்பட்டு, மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீநகரில் குருபஜார் என்ற பகுதியில் இருந்து டல்கேட் வரை ஷியா பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

காலை 8 மணி அளவில் இந்த ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்ததற்காக துணை நிலை ஆளுநர் நிர்வாகத்திற்கு ஷியா பிரிவினர் நன்றி தெரிவித்தனர். “இந்த ஊர்வலத்தை நடத்த கடந்த 34 வருடங்களாக நாங்கள் ஏங்கினோம். ஹஸ்ரத் இமாம் ஹுசைனை நினைவுகூரும் வகையில் நாங்கள் கொடிகளை ஏந்தியது ஒரு வரலாற்று தருணம்” என்று ஊர்வலத்தில் பங்கேற்ற அமீர் ஜாஃபர் தெரிவித்தார்.

மொஹரம் ஊர்வலத்தையொட்டி ஸ்ரீநகரில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். "ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அதிகாலை 2 மணி முதல் சாலைகளில் நிறுத்தப்பட்டனர். ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது" என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x