Published : 27 Jul 2023 04:19 PM
Last Updated : 27 Jul 2023 04:19 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் "காங்கிரஸின் இருண்ட ரகசியங்களை ‘டெட் டைரி’ வெளிக்கொண்டு வரும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "கற்பனையான ரெட் டைரியை பார்க்க முடிகிற பிரதமரால், சிவப்புத் தக்காளி, சிவப்பு சிலிண்டர் விலையுயர்வைப் பார்க்க முடியவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் நகரில் வியாழக்கிழமை நடந்த பொதுக்கூட்ட பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "லூட் கி துகான் ஜூட் கி துகான்... சமீபத்திய தயாரிப்பு ‘ரெட் டைரி’. அந்த டைரியில் காங்கிரஸ் அரசின் இருண்ட ரகசியங்கள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த டைரி திறக்கப்பட்டால் பல முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். அந்த ரெட் டைரி காங்கிரஸின் மிகப் பெரிய தலைவர்களையும் வாயடைக்க வைத்துள்ளது. அவர்கள் தங்களின் வாய்க்கு பூட்டுப்போட நினைத்தாலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த ரெட் டைரி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அடியைக் கொடுக்கும்.
இன்று ராஜஸ்தானில் ஒரே முழக்கம்தான் கேட்கிறது. அது ‘தாமரை வெல்லும்... தாமரை மலரும்’. ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு மாநிலங்களின் வளர்ச்சியை திருடிவிட்டது. இந்த அரசு மக்களைத் தண்ணீருக்காக ஏங்க வைத்துள்ளது. நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் மீதான வன்முறைகளை ராஜஸ்தான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது" என்று பிரதமர் மோடி பேசினார்.
முதல்வர் கெலாட் பதிலடி: மாநில அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். "ரெட் டைரி என்பது ஒரு கற்பனை. அப்படி ஒன்று இல்லை. இல்லாத ரெட் டைரியை பார்க்க முடிகிற பிரதமரால் ரெட் தக்காளி, ரெட் சிலிண்டரையும், அதன் விலைவாசி உயர்வால் சிவந்து போயிருக்கும் மக்களின் முகங்களையும் பார்க்க முடியவில்லை. இந்தத் தேர்தலில் பிரதமருக்கு மக்கள் சிவப்புக் கொடி காட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.
ரெட் டைரி பின்னணி: கடந்த வாரத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த சில விஷயங்களைத் தொடர்ந்து ‘ரெட் டைரி’ அம்மாநில அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது என்று சொந்தக் கட்சி, அரசுக்கு எதிராக கருத்துக் கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குடா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தன்னால் முதல்வர் அசோக் கெலாடை அம்பலப்படுத்த முடியும் என்று கூறி கையில் ஒரு ரெட் டைரியுடன் (சிவப்பு நிற டைரி) சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற அவர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் கிளர்ச்சி செய்தபோது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள், சுயேட்சைகள் மற்றும் பிறருக்கு வழங்கப்பட்ட தொகைகளின் விபரங்கள் இதில் அடங்கியுள்ளது என்று குடா தெரிவித்திருந்தார். ராஜேந்திர குடாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அவை இட்டுக்கட்டப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.
ட்வீட் போர் - முன்னதாக, வியாழக்கிழமை ராஜஸ்தான் வரும் பிரதமரை வரவேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்திருந்த மாநில முதல்வர் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இன்று நீங்கள் ராஜஸ்தான் வருகை தர இருக்கிறீர்கள். உங்களது அலுவலகம் எனது திட்டமிடப்பட்ட 3 நிமிட உரையை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதனால், என்னால் தங்களை உரையின் மூலமாக வரவேற்க முடியாது. அதனால், இந்தப் பதிவின் மூலம் ராஜஸ்தான் வரும் உங்களை நான் மனதார வரவேற்கிறேன்" என்று கெலாட் இந்தியில் தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம் சிறிது நேரத்தில் ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளது. அதில், "மரபுகளின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். உங்களின் உரைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் அலுவலகம், உங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT