Published : 26 Jul 2023 06:48 PM
Last Updated : 26 Jul 2023 06:48 PM

மணிப்பூர் விவகாரம் | கருப்பு உடையில் நாளை நாடாளுமன்றம் வர எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக நாளை கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வர எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி அதன் பின்னர், இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நாளை கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வர எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. "நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவது என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு மட்டுமல்ல. 'இண்டியா' கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் முடிவு" என காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார்.

இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படுமானால் அது வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், "மக்களவையில் 'இந்தியா' கூட்டணியின் எண்ணிக்கை பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இது வெறும் எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. இது நீதிக்கான மணிப்பூரின் போராட்டம் பற்றியது. மணிப்பூரை பிரதமர் மோடி மறந்து போகலாம்; ஆனால், 'இண்டியா' கூட்டணி ஒருபோதும் மறக்காது; நாங்கள் அவர்கள் பக்கம் நிற்போம் என்ற செய்தியை மணிப்பூரில் வாழும் ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் தெரிவிப்பதற்கான முயற்சி இது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து இது குறித்து பேச வேண்டும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பற்றியது இது. எனவே, நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி கண்டிப்பாக பேச வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதனிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விதி எண் 176ன் கீழ் குறுகிய நேர விவாதத்தை நடத்த வலியுறுத்தி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரிடம் வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து மனு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x