Published : 26 Jul 2023 05:33 PM
Last Updated : 26 Jul 2023 05:33 PM

தேவை ஏற்பட்டால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியா தாண்டும்: ராஜ்நாத் சிங்

கார்கில்: தேவை ஏற்பட்டால் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியா தாண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 24-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடம் லடாக்கின் திராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் பேசியதாவது: "தேவை ஏற்பட்டால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டியும் செயல்படுவதற்கான சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நமது ராணுவத்துக்கு வழங்கி இருக்கிறது. 1999ல் நடந்த கார்கில் போரின்போது நாம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடக்கவில்லை. அதைக் கடக்க முடியாது என்று அர்த்தமல்ல. நாம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்திருக்கலாம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நம்மால் கடக்க முடியும். தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் எல்லைக் கோட்டைக் கடப்போம்.

மற்ற அனைத்து நாடுகளின் மீதும் இந்தியா மிகுந்த மரியாதை வைத்துள்ளது. சர்வதேச நடத்தைக்கான நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் தாராள மனப்பான்மையை அதன் பலவீனம் என்று தவறாகக் கருத முடியாது. கார்கில் போரில் தீவிரமாகப் போராடி, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களின் வீரம் அசாத்தியமானது. அவர்களின் தியாகத்திற்கு நாடு கடன்பட்டிருக்கிறது. நாட்டின் எல்லைகளை நமது ராணுவம் பாதுகாத்து வரும் வரை, இந்தியாவை நோக்கிக் கண்களை உயர்த்த யாருக்கும் தைரியம் இருக்க முடியாது. கார்கில் போரின்போது மட்டுமல்ல, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நமது ராணுவம் பலமுறை நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு யாத்திரை மேற்கொண்டு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இருந்தபோது, அந்நாடு நமது முதுகில் குத்தியது. பாகிஸ்தான் அணு ஆயுத அச்சுறுத்தலைக் கூட நாடியது. அணு ஆயுதம் ஏந்திய நாட்டிடம் இருந்து இந்தியா தங்களின் உரிமையான நிலப்பரப்பை திரும்பப் பெற முடியுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் நலன்களைப் பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்பதை நமது ராணுவம் முழு உலகிற்கும் நிரூபித்துள்ளது. படைவீரர்களின் எண்ணிக்கை அல்லது அணு ஆயுதங்களால் போர் வெற்றி பெறுவதில்லை. மாறாக வீரர்கள் வெளிப்படுத்தும் வீரமும், தீரமுமே அதை நிர்ணயிக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. வியூக வகுப்பாளர்களும் ராணுவமும் போரை நுணுக்கமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். தொடக்கத்தில், உக்ரேனிய ராணுவம் மோசமாக பாதிக்கப்பட்டது. ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதியும் பாதிக்கப்பட்டது. என்றாலும், மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மக்கள்தான். உக்ரைன் மக்கள் ஆயுதப் பயிற்சி பெற்று ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்டுள்ளனர்" என்று ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், முப்படைத் தளபதி அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர். ஹரி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x