Published : 25 Jul 2023 02:56 PM
Last Updated : 25 Jul 2023 02:56 PM

“பேசச் சொல்வது மணிப்பூர் பற்றி, பேசுவதோ கிழக்கிந்திய கம்பெனி குறித்து...” - பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி

மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: "நாங்கள் மணிப்பூரை பற்றி விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், பிரதமர் மோடியோ கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்" என்று இண்டியா கூட்டணி குறித்த பிரதமரின் பேச்சுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இரண்டு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. இதனால் மக்களவை மதியம் 2 மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 12 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசுகையில், "நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய இந்த நான்கு நாட்களில் பல பிரதிநிதிகள் விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது முதல் முறை இல்லை. 2016-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது விவாதம் நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது மணிப்பூர் பற்றி எரிகிறது. நாங்கள் அதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்" என்று கார்கே பேசினார். இதனைத் தொடர்ந்து, நிலவிய அமளியால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் ராகுல் காந்தி இட்ட பதிவில், "நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள் இண்டியா தான். நாங்கள் மணிப்பூரின் காயங்கள் ஆற உதவுவோம். நாங்கள் மணிப்பூர் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைப்போம். நாங்கள் மணிப்பூரின் அனைத்து மக்களுக்கும் அன்பையும், சமாதானத்தையும் மீட்டுக் கொடுப்போம். இந்தியா என்பதன் கருத்தியலை நாங்கள் மணிப்பூரில் மீள்கட்டமைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் விமர்சனம்: முன்னதாக, பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, "இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இண்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறாது. அதனால், ‘இண்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது.

தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ - வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட எதிர்க்கட்சிகளின் முன்னணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. அதில் 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு, இந்திய தேசிய உள்ளடங்கிய வளர்ச்சி கூட்டணி என பொருள்படும்படி ‘இண்டியா’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x