Published : 25 Jul 2023 09:55 AM
Last Updated : 25 Jul 2023 09:55 AM
இம்பால்: மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது. ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் படையிடம் விளக்கம் கோரியுள்ளார்.
ஏற்கெனவே இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தபோதே சட்டவிரோத வருகைகளை ஊக்குவிக்கக்கூடாது. கடுமையான கெடுபிடிகளைக் கடைபிடித்து முறையான பயண ஆவணங்கள் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு மணிப்பூர் மாநில அரசு வலியுறுத்தியிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தோம் என்று ஜோஷி சுட்டிக்காட்டினார்.
State Govt sought a detailed report from Assam Rifles authority to clarify the facts and compelling circumstances as to why and how these 718 Myanmar nationals were allowed to enter in Chandel district of Manipur, India without proper travel documents. pic.twitter.com/BPK5Dyh18X
— Delhi Meitei Forum (@delhimeitei) July 24, 2023
விளக்கம் சொல்லும் அசாம் ரைஃபில்ஸ்: ஆனால் இது தொடர்பாக ஏற்கெனவே காவல்துறை கவனத்துக்கு கொண்டு வந்ததாக அசாம் ரைஃபில்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி சாண்டெல் மாவட்டம் வழியாக மியான்மரில் இருந்து மணிப்பூரில் 718 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக காவல் துணை ஆணையருக்கு தகவல் அனுப்பியதாக அசாம் ரைபிள்ஸ் படை தெரிவித்துள்ளது. மியான்மரின் காம்பெட் பகுதியில் மூண்டுள்ள மோதல் காரணமாக அவர்கள் மணிப்பூரில் தஞ்சம் புகுந்ததாக விளக்கியதாகவும் அப்படைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருபினும், 718 பேர் தஞ்சம் புகுந்த விவகாரம் தொடர்பாக துணை ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி புதிதாக வந்த அனைவரின் பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை சேகரிக்குமாறு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி வீடியோ; போலீஸ் எஃப்ஐஆர்: இது ஒருபுறம் இருக்க, இளம் பெண் ஒருவரை வன்முறை கும்பலும், ராணுவ வீரர்களும் இணைந்து கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காட்சிகளைப் பரப்பி அது மணிப்பூரில் நடந்ததாக போலி தகவல்களைப் பரப்பியதாக போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அந்த வீடியோ மியான்மரில் எடுக்கப்பட்டது என்றும் மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் விதமாக யாரோ சில விஷமிகள் இவ்வாறு செய்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அமைதிக்காக காத்திருக்கும் மணிப்பூர்! மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கிடைத்துள்ளது.
அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர். மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக் கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு இடையே தற்போது மியான்மர் எல்லை வழியாக சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளது மற்றொரு பிரச்சினையாக இணைந்துள்ளது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் மணிப்பூர் அமைதிக்காக காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT