Published : 16 Nov 2017 09:09 AM
Last Updated : 16 Nov 2017 09:09 AM

இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி: திரைப்படமாகிறது என்.டி.ஆர் வாழ்க்கை - மனைவி லட்சுமி பார்வதி வேடத்தில் ராய் லட்சுமி நடிக்கிறார்

திரைத் துறையிலும் அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டிய மறைந்த என்.டி.ராமா ராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகிறது.

புராண, இதிகாச கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சமூக சீர்திருத்தம் தொடர்பான திரைப்படங்களிலும் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்.டி. ராமா ராவ். என்.டி.ஆர். என அழைக்கப்படும் இவர் ஏற்காத புராண கதாபாத்திரங்களே இல்லை என்று கூட சொல்லலாம். இவர் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

திரைத் துறை மட்டுமின்றி அரசியலிலும் காலூன்றி வெற்றி பெற்றவர் என்.டி.ஆர். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தார். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் இப்போது ஆட்சி செய்து வருகிறது. இவரது மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார்.

3 படங்கள்

இந்நிலையில், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக அவரது மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா சமீபத்தில் அறிவித்தார். இவரைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் என்.டி.ஆரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இருப்பதாக அறிவித்தார்.

இத்திரைப்படத்திற்கு ‘லட்சுமீ’ஸ் என்.டி.ஆர்’ என பெயரும் சூட்டி உள்ளார். இது என்.டி.ராமா ராவ், அவரது மனைவி லட்சுமி பார்வதி இடையிலான உறவைப் பற்றிய கதை என ராம்கோபால் வர்மா கூறியுள்ளார். இதற்கு லட்சுமி பார்வதியும் அனுமதி வழங்கி உள்ளார்.

இதனிடையே, கேதி ரெட்டி என்பவரும் ‘லட்சுமீ’ஸ் வீர கிரந்தம்’ என்ற பெயரில் என்.டி.ராமா ராவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் லட்சுமி பார்வதியின் முன்னாள் கணவர் சுப்பா ராவ் குறித்த சில உண்மைகளும் வெளிவர இருப்பதாகக் கூறினார். மேலும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டன. இதில் லட்சுமி பார்வதி கதாபாத்திரத்தில் நடிகை ராய் லட்சுமி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இயக்குநர் கேதி ரெட்டி மற்றும் தயாரிப்பாளர் விஜயகுமார் கவுட் ஆகியோர் ஆந்திர டிஜிபியிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். என்.டி.ஆர். பற்றிய திரைப்படத்தை தடுத்து நிறுத்த சிலர் முயற்சி செய்வதாகவும், தொலைபேசி மூலம் லட்சுமி பார்வதி தரப்பினர் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x