Published : 07 Nov 2017 02:30 PM
Last Updated : 07 Nov 2017 02:30 PM
பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 2016 நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளைய தினத்தை (நவம்பர் 8) கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், பணமதிப்பு நீக்கம் குறித்து இன்று (நவம்பர் 7) அகமதாபாத்தில் வர்த்தகர்கள் மத்தியில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தின் கறுப்பு தினம். இந்த உலகில் எந்த ஒரு ஜனநாயக நாடும் இத்தகைய நிர்பந்தத்தை திணித்ததில்லை.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் எடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரிலான முயற்சிகள் அனைத்தும் சீனாவுக்கே சாதகமாக அமைந்துள்ளன. ஏனெனில், சீனாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் சூரத், வாபி, மோர்பி போன்ற வர்த்தக மையங்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி இப்பகுதிகளை இன்னமும் மோசமான நிலைமைக்கு தள்ளியிருக்கிறது. குஜராத் போன்ற மாநிலங்களில், பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் சிறு வணிகங்களின் முதுகெலும்பை நொறுக்கியுள்ளது. உள்நாட்டில் தொழில்முனைவோர் மனங்களில் ஜிஎஸ்டி வரி தீவிரவாதமாகவே பதிந்துள்ளது.
நான் ஏற்கெனவே ராஜ்யசபாவில் கூறியதை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன், பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை" இவ்வாறு அவர் பேசினார்.
புல்லட் ரயில் திட்டம் - தற்பெருமை திட்டம்
அவர் மேலும் பேசும்போது, "புல்லட் ரயில் திட்டம் தனது தற்பெருமையை பறைசாற்ற பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டம். அதிவேக ரயில்களுக்கு மாற்றுத் திட்டத்தை மட்டுமே மனதில் கொண்டு இத்திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தாரானால் முதலில் அவர் அகல ரயில் பாதைகளை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். புல்லட் ரயிலை விமர்சிப்பதால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தை கேள்வி கேட்பதால் வரி ஏய்ப்பு செய்பவர் என்றும் அர்த்தமல்ல" எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT