Published : 24 Jul 2023 06:10 PM
Last Updated : 24 Jul 2023 06:10 PM

“மணிப்பூர் உடன் மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா?” - கார்கே சரமாரி கேள்வி

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிரொலித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல் நாளில் மணிப்பூர் அவலம் தொடர்பான வீடியோ வெளியானதால் முதல் இரண்டு நாட்கள் கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாளும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மணிப்பூர் மட்டுமல்லாது, நாட்டின் வேறு சில மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துள்ளதால் அவை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கார்கே, “மணிப்பூரோடு மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா? மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக இல்லை. இதுபோல வேறு எங்காவது உள்ளதா? அவர்கள் தங்கள் பலவீனத்தை மறைக்க வேறு சில இடங்களில் நடந்த விஷயங்களை இழுப்பது சரியல்ல.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஆட்சியாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நீங்கள் உங்கள் கவலையை தெரிவிக்கலாம். உங்கள் மக்கள்தான் அங்கு இருக்கிறார்கள். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிடுவது ஒன்றும் புதிதல்ல. எப்போதுமே இது நடக்கக்கூடியதுதான். ஜனநாயகத்தில் பேச்சுரிமை இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் ஏதோ ஒரு வகையில் குரல்களை நசுக்குவதுதான்.

விதிப்படி விவாதம் நடத்தப்பட வேண்டும்; ஆனால் அவர்கள் தயாராக இல்லை. மணிப்பூர் பிரச்சினை பிரதானமானது. இது ஒரு சிறிய பிரச்சினை அல்ல. இது குறித்து விவாதிக்கப்பட்டு, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பிரதமர் கூற வேண்டும். அவர் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பது புரியாத ஒன்று" என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதேபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "மணிப்பூர் விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் சபைக்கு வந்தால், வானம் இடிந்து விடாது. உலகம் முழுவதும் - ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வரை, இது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இது உள்துறை அமைச்சகத்துக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. எனவே, பிரதமர் மோடி அவசியம் அவைக்கு வரவேண்டும்" என தெரிவித்துள்ளார். | வாசிக்க > “மணிப்பூர் விவாதத்துக்கு தயார்; மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்” - அமித் ஷா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x