Published : 24 Jul 2023 04:24 PM
Last Updated : 24 Jul 2023 04:24 PM
புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதால், அதைப் பற்றி அவையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிரொலித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல் நாளில் மணிப்பூர் அவலம் தொடர்பான வீடியோ வெளியானதால் முதல் இரண்டு நாள் கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாளும் மக்களவை இருமுறை ஒத்திவைப்புகளுக்குப் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மதியம் 2.30 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது உள்துறை அமித் ஷா பேசினார். அப்போது அவர், "மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பிரதமர் பேச வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபடுகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால், அதுபற்றி விவாதிக்க வேண்டும்" என்றார். எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் போட்டா போட்டி: இதனிடையே, இன்று நாடாளுமன்றம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, என்டிஏ, இண்டியா எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, அசோக் கெலாட் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அம்மாநில பாஜக எம்பிகள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.களும் காந்தி சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதிக்க தயாராக இல்லாமல் ஓடி ஒளிகின்றனர் என்று பாஜக உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மணிப்பூர் விவாகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதாவது, மணிப்பூர் விவாகாரம் குறித்து விதி 267-ன் கீழ் நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், விதி 176-ன் கீழ் மட்டுமே விவாதிக்க தயாராக இருப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. விதி 267 என்பது மாநிலங்களவை உறுப்பினருக்கு அவைத் தலைவரின் ஒப்புதலுடன், முன்தீர்மானிக்கப்பட்ட அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேதனை தெரிவித்த பிரதமர்: நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT