Published : 24 Jul 2023 03:33 PM
Last Updated : 24 Jul 2023 03:33 PM
புதுடெல்லி:மாநிலங்களவை அலுவல் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, தற்போது நிலவி வரும் நாடாளுமன்ற முடக்கம் குறித்து சாத்தியமான தீர்வு காண எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, இந்த மழைக்காலக் கூட்டத் தொடரின் மீதி இருக்கும் நாடகளில் பங்கேற்க தடைவிதித்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தன. இதனிடையே, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்து விவாதிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். அப்போது மணிப்பூர் கொடூரம் பொறுத்துக் கொள்ள முடியாது. அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் பேச வேண்டும் என்று என்று தெளிவுபட தெரிவித்தார்.
சஞ்சய் சிங் இடைநீக்கம்: அவைத் தலைவரின் உத்தரவுகளை தொடர்ந்து மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்தக் கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார். காலையில் மாநிலங்களவைத் தொடங்கி அமளியால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியது. அப்போது மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களிட்டனர். அந்தநிலையிலும் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி., சஞ்சய் சிங் அவையின் மையத்துக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங்கை அவரது இருக்கையில் சென்று அமருமாறு அவைத் தலைவர் கூறினார். ஆனாலும் அவர் தொடர்ந்து முழக்கமிடவே சஞ்சய் சிங்கின் பெயரினை அவைத் தலைவர் தன்கர் அழைத்தார். இதனைத் தொடர்ந்து, சஞ்சய் சிங்கை இடைநீ்க்கம் செய்ய வேண்டும் என்று பியூஷ் கோயல் தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் இந்த கூட்டத்தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மணிப்பூர் குறித்து விவாதம்: மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுகுறித்து நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருன்றன. மணிப்பூர் குறித்து அரசு குறுகிய விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கூறிவருகிறது. இந்தப் போக்குக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் முடக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment