Published : 24 Jul 2023 01:02 PM
Last Updated : 24 Jul 2023 01:02 PM

மணிப்பூர் கொடூரம் | நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்; ’போட்டி’யாக களத்தில் என்டிஏ

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பாஜக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் இரு அவைகளும் அமளி நீடித்து வருகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்து வருகின்றனர். முதல் இரண்டு நாட்களிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் எந்த அலுவலும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மூன்றாவது நாளாக முடக்கம்: இந்த நிலையில், மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலையில் நாடாளுமன்றம் கூடியது. மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் இன்று விவாதத்துக்காக விதி 176-ன் கீழ் 11 நோட்டீஸ்களும், விதி 267-ன் கீழ் 27 நோட்டீஸ்களும் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அமளி காரணமாக அவை மதியம் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாஜக உறுப்பினர்கள் சுதன்ஷு திரிவேதி மற்றும் சுஷில் மோடி மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்துள்ளனர். அவைத் தலைவரான ஜெக்தீப் தன்கர் விதி 267-ன் கீழ் எந்த விவாதத்துக்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அதேபோல் மக்களவைத் தொடங்கியதும் அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். ‘இண்டியா’ மணிப்பூருடன் நிற்கிறது என்று பதாகைகளும் காட்டினர். தொடர் அமளியால் மக்களவையும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி உறுப்பினர் இடைநீக்கம்: இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இந்த நிலையில், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் அவையின் மையப்பகுதிக்கு வந்து மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் பியூஷ் கோயல் ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் தன்கர் சிங் மீதமிருக்கும் கூட்டத் தொடர் நாட்களில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

என்டிஏ -இண்டியா ஆர்ப்பாட்டம்: இதனிடையே, இன்று நாடாளுமன்றம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, என்டிஏ, இண்டியா எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, அசோக் கெலாட் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அம்மாநில பாஜக எம்பிகள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.களும் காந்தி சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதிக்க தயாராக இல்லாமல் ஓடி ஒளிகின்றனர் என்று பாஜக உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மணிப்பூர் விவாகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதாவது, மணிப்பூர் விவாகாரம் குறித்து விதி 267-ன் கீழ் நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், விதி 176-ன் கீழ் மட்டுமே விவாதிக்க தயாராக இருப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. விதி 267 என்பது மாநிலங்களவை உறுப்பினருக்கு அவைத் தலைவரின் ஒப்புதலுடன், முன்தீர்மானிக்கப்பட்ட அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், ‘ரியாக்டிவ் மோடு’ நிலையில் பாஜக இருப்பதாகவும், மணிப்பூர் பிரச்சினையை திசை திருப்ப "காப்பிகேட்" நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இண்டியா சரியாக செயல்படுகின்றது என்பதற்கான அறிகுறிகள். மணிப்பூர் விவாகரம் தொடர்பாக எங்கள் கூட்டணி சார்பில் ஜூலை 24-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கு எதிர்வினையாக, எங்களை நகலெடுக்கும் விதமாக இன்று காலையில் அவசரமாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x