Published : 21 Nov 2017 02:14 PM
Last Updated : 21 Nov 2017 02:14 PM
டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் சிகிச்சைக்காக 18 லட்சம் வசூலித்ததாக குருகிராம் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''குருகிராமில் உள்ள ஃபோர்ட்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் என்னுடைய 7 வயது மகள் டெங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே சுமார் 15 நாட்கள் நரகமாகக் கழிந்தன. நாங்கள் மகள் பிழைக்கவேண்டும் என்ற வேண்டுதலை முடிவே இல்லாமல் வைத்துக் கொண்டிருந்தோம். மருத்துவர்கள் எம்ஆர்ஐ பகுப்பாய்வு மூலம் மகளின் மூளை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் அதனால் அவர் உயிர் பிழைப்பது சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மருத்துவர்கள், செயற்கை சுவாசக் குழாயை மருத்துவமனையில் அகற்ற மாட்டோம் என்று கூறினர். வீட்டுக்குச் சென்று எடுத்துவிடுங்கள் என்றும் எங்களிடம் ரகசியமாகக் கூறினர். அப்போதைக்கு அதை ஒத்துக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. காரணமும் புரியவில்லை.
டெங்குவால் மருத்துவமனையில் மரணம் நிகழ்வதை அவர்கள் விரும்பவில்லை என்று இப்போது புரிந்துள்ளது.
'ரூ.18 லட்சம் வசூல்'
அத்துடன் மகளை எடுத்துச் செல்ல சொந்தமாக ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துகொள்ளவும் எங்களை அறிவுறுத்தினர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தபிறகும் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைத் தொகையாக ரூ.18 லட்சம் வசூலித்தது.
என்னுடைய மகள் கடைசியாக அணிந்திருந்த துணிக்குக் கூட பணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. அதுமட்டுமல்ல. என் மகளின் உடலைச் சுற்றியிருந்த துணியையும் கேட்டனர். அதற்கும் நாங்கள் பணம் செலுத்தினோம்''.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அதிக விலைக்கு மருந்துகள்'
உயிரிழந்த சிறுமியின் குடும்ப நண்பர் நடந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ''மருத்துவமனை 660 சிரிஞ்சுகளுக்கான (ஒரு நாளைக்கு 40 சிரிஞ்சுகள்) தொகையை வசூலித்துள்ளது. அதே போல சர்க்கரை ஸ்ட்ரிப்புகள் ரூ.13-க்கே கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு ஸ்ட்ரிப்புக்கு ரூ.200 என்ற விகிதத்தில் வசூலித்துள்ளனர்.
நாங்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்த பிறகும், செயற்கை சுவாசக் குழாயைக் காரணம் காட்டி மருத்துவர்கள் ஸ்கேன்களை எடுக்க மறுத்தும் தாமதப்படுத்திக் கொண்டும் இருந்தனர். இப்போது சிடி ஸ்கேன்களை வென்டிலேட்டர் உடனும் எடுக்க முடியும். ஆனால் அவர்கள் எடுக்கவில்லை. கடைசியாக அவர்கள் ஸ்கேனை எடுத்தபோது, சிறுமியின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மறுப்பு
ஆனால் இவற்றை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ''சிறுமியின் அபாயகரமான நிலை குறித்து அவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்து தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் மருத்துவ ஆலோசனைகளுக்கு எதிராக சிறுமியை அவர்கள் அழைத்துச் சென்றபோது உயிரிழப்பு நிகழ்ந்துவிட்டது ''என்று கூறியுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ் நட்டா உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT