Published : 11 Nov 2017 09:07 AM
Last Updated : 11 Nov 2017 09:07 AM
மேலை நாடுகளை போல் உரிய நடவடிக்கை எடுத்தாலும் டெல்லியில் மாசு பிரச்சினை தீர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்று கான்பூர் ஐஐடி-யின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் எஸ்.என்.திரிபாதி கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருபவர் திரிபாதி. கான்பூர் ஐஐடி-யில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் மையம், பூகோள அறிவியல் துறை ஆகியவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். டெல்லியின் மாசு பிரச்சினை குறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:
வட இந்தியாவில் இந்த ஆண்டு அதிக மூடுபனி ஏன்?
இதற்கு பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பயிர் எரிப்பு ஒரு முக்கியக் காரணம். கடந்த அக்டோபர் 20-ல் இதனால் தொடங்கிய புகை 29, 30 ஆகிய தேதிகளில் உச்சகட்டத்தை எட்டியது. வழக்கமாக இந்தப் புகை டெல்லியை அடைய 3 முதல் 4 நாட்கள் ஆகும். இந்த வகையில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் இந்தப் பிரச்சினை தொடங்கியது. தற்போது புகைமண்டலம் சற்று குறைந்துள்ளது. அடுத்த 4 நாட்களில் இது டெல்லியை விட்டு முற்றிலும் விலகிவிடும். இதை மூடுபனி (Mist ) என்று கூறமுடியாது. இதை புகைப்பனி (Smog) என்றுதான் கூறவேண்டும். இதில் கலந்துள்ள மாசு அளவு 1,000 மைக்ரோ கிராமை விட அதிகமாக உள்ளது.
இந்த புகைப்பனியில் எந்த வகை துகள்கள் கலந்துள்ளன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இதில் சுமார் 60 சதவீதம் காற்றின் வழியாக வரும் ‘ஆர்கனிக் ஏரோபோல்ஸ்’ உள்ளன. மீதம் உள்ளவை நைட்ரேட், சல்பேட், அம்மோனியம், பிளாக் கார்பன் மற்றும் மிகச்சிறிய துகள்கள் ஆகும். இவை அனைத்தும் ஆபத்தானவை. இவற்றில் மிகச்சிறிய துகள்கள், பிளாக் கார்பன், ஆர்கனிக் கார்பனின் ஒருபகுதி ஆகியவை உடல்நலனுக்கு மிகவும் ஆபத்தானது.
வட இந்தியாவை விட அதிக குளிர் கொண்ட அமெரிக்கா, பிரிட்டனில் இந்த பிரச்சினை வந்தபோது எப்படி சமாளித்தனர்?
இந்தப் பிரச்சினை கலிபோர்னியாவில் வந்தபோது அங்கு ‘கலிபோர்னியா ஏர் ரிசோர்ஸ் போர்டு’ என்ற அமைப்பை உருவாக்கி 40 வருடங்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்போது அங்கு மாசு படியாத மிகவும் தூய்மையான காற்று கிடைக்கிறது. லண்டனில் வந்த பிரச்சினையில் கலிபோர்னியாவை விட பல மடங்கு அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாக அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
சுற்றுச்சூழல் தொடர்பாக டெல்லி எடுக்கும் முடிவுகளுக்கு மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே செயல்படும் வகையில் ‘கங்கா பேசின் ஏர் ரிசோர்ஸ் போர்டு’ என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கலாம். கங்கை நதி பாயும் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வேண்டும். இதன் நிர்வாகிகளாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை நியமிக்காமல் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், சட்டநிபுணர்களை நியமிக்க வேண்டும். ஏனெனில் இதன் செயல்பாட்டில் பல்வேறு சட்டசிக்கல்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். மேலை நாடுகளை போல, இதுபோன்ற உரிய அமைப்பு மூலம் தீவிர நடவடிக்கை எடுத்தால் பலன் கிடைக்கும். என்றாலும் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.
மழைப் பொழிவதால் மாசு குறையும் என்பது உண்மைதான். ஆனால், ஹெலிகாப்டர் மூலம் நீர் தெளிப்பது சாத்தியமல்ல. இதற்கு இரவு பகலாக அதிக ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு அதிக செலவாகும். இதை செய்தாலும் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் பிரச்சினை மீண்டும் எழும்.
தென்னிந்திய மாநிலங்களில் இந்தப் பிரச்சினை இல்லை. இங்கு சுற்றுச்சுழல் மாசு குறைவு என எடுத்துக்கொள்ளலாமா?
தென்னிந்திய நில அமைப்பு வட இந்தியாவை விட முற்றிலும் மாறுபட்டது. வடஇந்தியாவின் ஒரு பகுதியில் பெரிய அரணாக இமயமலை உள்ளது. இது மாசு விரைந்து வெளியேறுவதற்கு பெருந்தடையாக உள்ளது. தென்னிந்தியாவிலும் மாசு பிரச்சினை உள்ளன. ஆனால் உடனடியாக வெளியேறி விடுகிறது.
சென்னை போன்ற நகரங்கள் கடலை ஒட்டியிருப்பதால் அவற்றில் மாசு குறைய வாய்ப்புள்ளதா?
கடல் காரணமாக வீசும் ஈரக் காற்று மாசு அளவை குறைக்கும். கடல் மீது பறக்கும் மாசுக்களும் அதன் நீரில் விழுந்து அடங்கி விடும். அவ்வப்போது பெய்யும் மழையின் பலனும் இதற்கு கிடைக்கிறது. ஆனால் ஒரு அளவுக்கு மேல் மாசு படியத் தொடங்கினால் அதன் பாதிப்பு ஏற்படும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT