Published : 21 Nov 2017 09:51 AM
Last Updated : 21 Nov 2017 09:51 AM
அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் வரும் 27-ம் தேதி வர உள்ளதையடுத்து, ஹைதராபாத் நகரை ரூ.46 கோடியில் அழகுபடுத்தும் பணியில் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்து வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் நகரில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் சர்வதேச தொழில்முனைவு உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகளும் அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
மேலும் பல நாடுகளைச் சேர்ந்த 1,600 தொழிலதிபர்கள், 5 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர், கோல்கொண்டா கோட்டை, பிர்லா கோயில், ஆளுநர் மாளிகை, ஃபலக்நமா பேலஸ் உட்பட சரித்திர புகழ்பெற்ற இடங்களை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
இந்த மாநாட்டை ஒட்டி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இவாங்கா பயணிக்கும் சாலைகள், 28-ம் தேதி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஃபலக்நமா பேலஸ் ஆகிய இடங்களில் கூடுதலாக 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நவீன பாதுகாப்பு கருவிகள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்யும் கருவி, முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் கருவி (ஃபேஸ் ஸ்கேனர்) சக்தி வாய்ந்த மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவை பொருத்தப்பட உள்ளன.
2 நாட்களுக்கு ஹைதராபாத்தில் தங்கும் இவாங்காவுக்காக ஹைதராபாத் மாநகரம் விழாக்கோலம் பூண்டு வருகிறது. அவர் சுற்றிப்பார்க்கும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நகரில் முக்கிய இடங்களில் உள்ள பிச்சைக்காரர்களை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. ஆனால் வேறு எங்கும் செல்ல மாட்டோம் என பிச்சைக்காரர்கள் அடம் பிடித்தனர். இதனால் வேறு வழியின்றி அவர்களுக்கு வரும் 29-ம் தேதி வரை உண்ண உணவு, செலவுக்கு பணம், தங்கும் இடம் ஆகிய வசதிகளுக்கு ஏற்பாடு செய்து வேறு மாவட்டங்களுக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்நமா பேலஸில் 28-ம் தேதி, இவாங்கா ட்ரம்புக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த விருந்தில் இவாங்காவுக்கு பிரசித்தி பெற்ற ஹைதராபாத் ‘தம்’ பிரியாணி உட்பட புகழ்பெற்ற இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. மேலும் அவர் சுற்றிப்பார்க்க குதிரை வண்டியையும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இவர் சுற்றிப்பார்க்கும் இடங்களில் ரூ.60 லட்சம் செலவில் அழகிய மலர் செடிகள், மரக்கன்றுகள், செயற்கை புல்வெளிகள் நடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற் காக மொத்தம் ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT