Published : 23 Jul 2023 11:22 AM
Last Updated : 23 Jul 2023 11:22 AM
சென்னை: மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: "தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” - எல்லா ஊரும் எனது ஊர்; எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும். அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் - (sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...