Published : 23 Jul 2023 06:58 AM
Last Updated : 23 Jul 2023 06:58 AM

மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: மே 4-ம் தேதியே மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த குகி சமுதாய மக்களின் நினைவாக சுராசாந்த்பூர் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குகி சமுதாய பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர். படம்: பிடிஐ

இம்பால்: மணிப்பூரில் கடந்த மே-3-ம் தேதி நடந்த பழங்குடியின ஒற்றுமை யாத்திரையில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இனக்கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டும், போலீஸார் நடவடிக்கை எடுக்காதது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த மே 4-ம் தேதி பழங்குடியின பெண்கள் இருவரை, மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை மணிப்பூர் போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது போல் மணிப்பூரில் மே 3-ம் தேதிக்குப் பின் பல கொடூர சம்பவங்கள் நடைபெற்றது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தலைநகர் இம்பாலில் கடந்த மே 4-ம் தேதி அன்று மற்றொரு கொடூர சம்பவமும் நடைபெற்றது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் குகி இனத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பணியாற்றியுள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு வயது 24, அவரது தங்கைக்கு வயது 21. இருவரும் இம்பால் நகரில் மைத்தேயி மக்கள் அதிகம் வசிக்கும் கோன்வுங் மனாக் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டுக்கு கடந்த மே 4-ம் தேதி அன்று மைத்தேயி இனத்தவர்கள் கும்பலாக புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களை கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இவர்களின் தந்தை அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: நாங்கள் குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். எனது மகள்கள் வசித்த வீட்டுக்கு மைத்தேயி இனத்தைச் சேர்ந்த கும்பல் கடந்த மே 4-ம் தேதி புகுந்து கொலை செய்ததாக மூத்த மகளின் தோழி ஒருவர் கூறினார்.

இத்தகவலை கேட்டு சவக்கிடங்குக்கு நான் போலீஸ் அதிகாரியுடன் சென்றேன். எனது மகள்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , கொல்லப்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தேன். நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என போலீஸார் என்னிடம் தெரிவிக்கவில்லை. விசாரணைக்காக உடல்களை சவக்கிடங்கில் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு கொலை செய்யப்பட்ட சகோதரிகளின் தந்தை கூறினார். இவர் பாதிரியாராக உள்ளார். இவர் அளித்துள்ள புகாரில் மைத்தேயி இளைஞர்கள் அமைப்பான மீதே லீபுன், காங்லே பாக், கன்பா லூப், அரம்பை தெங்கோல் மற்றும் உலக மைத்தேயி கவுன்சில் போன்ற அமைப்பைச் சேர்ந்த கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்தான் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

மணிப்பூர் வன்முறையில் நடந்த பல கொடூர சம்பவங்களுக்கு வீடியோ ஆதாரம் இல்லை. அதனால் மணிப்பூர் போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என
குகி இனத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து மணிப்பூர் டிஜிபி ராஜிவ் சிங் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x