Published : 23 Jul 2023 06:45 AM
Last Updated : 23 Jul 2023 06:45 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நூர் ஷெகாவத் (19). 3-ம் பாலினத்தவரான இவர் கடந்த 19-ம் தேதி 3-ம் பாலினத்தவர் என அதிகாரப்பூர்வமாக பிறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளார். இவர் பிறக்கும்போது ஆண் என பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டிருந்தது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 3-ம் பாலினத்தவர் என பிறப்புச் சான்றிதழ் பெற்ற முதல் நபர் இவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து நூர் ஷெகாவத் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் 3-ம் பாலினத்தவர் என்ற பிறப்புச் சான்றிதழை பெற்ற முதல் நபர் நான்தான். இது எனக்குப் பெருமையளிக்கிறது. எல்லோரும் என்னைப் பாராட்டுகின்றனர். ஆனால் 3-ம் பாலினத்தவர் என்பதால் எனது குடும்பத்தாரே என்னை ஏற்கவில்லை. அடித்து துன்புறுத்தினர்.
இந்த உலகில் உன்னைப் போன்ற நபர்கள் பிறந்தால், பூகம்பம்தான் ஏற்படும் என்று என் குடும்பத்தாரே வசைபாடினர். தினமும் என்னை எனது பெற்றோர் வசைபாடுவர்.
இந்த பிறப்புச் சான்றிதழை கையில் பெறும்போது நான் மீண்டும் பிறந்ததாக உணர்கிறேன். நான் யாரென்பதை உணர்த்தும் உண்மையான பாலின அடையாளம்தான் இது.
3-ம் பாலினத்தவர் என்பதால் என் குடும்பத்தார் என்னை வெறுத்து ஒதுக்கினர். வீட்டை விட்டு விரட்டினர். நான் வீட்டை விட்டு இளம்வயதிலேயே வெளியே வந்து உணவுக்காக கஷ்டப்பட்டேன். படிக்க முடியாமல் திண்டாடினேன். எப்படியோ பள்ளிப்படிப்பை முடித்தேன்.
ஆனால், கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் அதிக அளவில் தொந்தரவு செய்தனர். அவர்களின் தொந்தரவால் படிப்பை பாதியில் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இணைச் செயலர் மற்றும் இயக்குநர் பன்வார் லால் பைர்வா கூறும்போது, “இனி பிறப்புச் சான்றிதழ்களில் ஆண், பெண் என இருப்பது போல், 3-ம் பாலினத்தவர் என்பதைக் குறிப்பிடுவதற்கு வசதி செய்யப்படும்” என்றார். நூர் ஷெகாவத் தற்போது, 3-ம் பாலினத்தவரின் நலனுக்காக அரசுசாரா அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT