Published : 23 Jul 2023 04:13 AM
Last Updated : 23 Jul 2023 04:13 AM
புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் இதுவரை 4.33 லட்சம் பேருக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 7-வது ரோஜ்கர் மேளா நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மத்திய அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கடந்த 9 ஆண்டுகளில்...: அப்போது அவர் பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். நமது லட்சியத்தை எட்ட அரசு ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்து, தற்போது 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இன்றைய தினம் வங்கித் துறையில் பலர் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் நமது வங்கித் துறை பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பிட்ட குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் பல ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடனைப் பெற்றனர்.
அவர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் வங்கித் துறையின் முதுகெலும்பு உடைந்தது. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்போது பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. சர்வதேச அளவில் வங்கித் துறை வலுவாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இந்த வெற்றி ஒட்டு மொத்த அரசு ஊழியர்களையே சேரும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் திறமையை வியந்து பார்க்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT