Published : 22 Jul 2023 03:51 PM
Last Updated : 22 Jul 2023 03:51 PM
புதுடெல்லி: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரம் பற்றி மாநில முதல்வர் பிரேன் சிங்குக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எப்படி தெரியாமல் போனது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்கள் மணிப்பூருக்குச் சென்று தங்கி இருந்தார். அங்கு அவர் அனைத்து சமூக குழுக்களையும் சந்தித்ததாக தெரிவித்தார். அப்போது யாரும் அவரிடம் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று தெரிவிக்கவில்லையா? உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? அதேபோல நூற்றுக்கான சம்பவங்கள் நடந்திருக்கின்ற என்று மாநில முதல்வர் பிரேன் சிங் இப்போது சொல்கிறார். அப்படியென்றால், அமித் ஷா அங்கு வந்தபோது அவரிடமிருந்து அச்சம்பவங்களை அவர் மறைத்தாரா?.
மாநில ஆளுநர் ஏன் அமைதியாக இருக்கிறார்? இது அமித் ஷாவுக்கு தெரியும் என்றால், அதை நாட்டுக்குச் சொல்லாமல் மறைத்தாரா? இவ்வளவு நாள் அமைதியாக இருந்த பிரதமர் மோடி, அந்தக் கொடூர சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்த பின் ஏன் பேசுகிறார்?" என்று கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக மே 3-ம் தேதி குகி சமூக மக்கள் மணிப்பூரில் அமைதி பேரணி ஒன்று நடத்தினர். இந்தப் பேரணியின்போது மைதேயி மற்றும் குகி சமூக மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அத்தொடர்ந்து அது கலவரமாக வெடித்து மாநிலம் முழுவதும் தொடர்ந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை மோதல் நீடித்து வருகிறது. கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரில் அமித் ஷா: இந்த நிலையில், மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்மாநிலத்துக்குச் சென்றார். ஜூன் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து, வடகிழக்கு மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காக குகி மற்றும் மைதேயி மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து அமித் ஷா கூறும்போது, “பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். மகளிர் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்தேன். மணிப்பூர் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றாக உறுதிபூண்டுள்ளோம். இங்கு விரைவில் அமைதி திரும்பும்”என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 24-ம் தேதி மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசானைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்காமல் வெளிநாட்டு பயணம் செய்வதை காங்கிரஸ் கட்சி அப்போது கேள்வி எழுப்பியிருந்தது.
பிரதமரிடம் விளக்கம்: இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு ஜூன் 27-ம் தேதி நாடு திரும்பிய பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த அமித் ஷா, மணிப்பூர் நிலவரம் குறித்தும், அங்கு அமைதி திரும்ப எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில், மணிப்பூரில் வன்முறை தொடங்கிய மே 4-ம் தேதி மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று இரண்டு குகி சமூக பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது. பாலியல் வன்கொடுமையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான 26 நிமிட வீடியோ ஒன்று புதன்கிழமை (ஜூலை 19) இணையத்தில் பகிரப்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தச் சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, மத்திய மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்வத்தைக் கண்டிதிருந்த பிரதமர் மோடி, "மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்றார்.
இதனிடையே, காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில், "ஒரு வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது; பிரதமர் மோடியை மவுனத்தைக் கலைக்க வைத்திருக்கிறது. இன்னும் நூறு சம்பவங்கள் பற்றி மக்களுக்கு தெரிய வந்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்.
மாநில ஆளுநர் அனுஷூயா உக்கி இப்போது தான் மிகுந்த துன்பத்தில் இருப்பதாகவும், தன் வாழ்நாளில் இப்படி ஒரு வன்முறையைப் பார்த்தது இல்லை என்கிறார். அவர் தான் அமைதி குழுவின் தலைவர். அவருக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியாதா? நேற்று அவர் காவல் துறை தலைவரை அழைத்து பேசியிருக்கிறார். இதற்கு முன்பு ஏன் பேசவில்லை? பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள ஆளுநர்கள் மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு உள்ள வித்தியாசத்தை உங்களால் பார்க்க முடிகிறதா?
தேசிய மகளிர் ஆணையம் ஏன் ஒரு புகாருக்கும் ஒப்புகை அனுப்பவில்லை? மேலே இருந்து கீழே இருப்பவர்கள் வரை யாரும் தர்மத்தை பின்பற்றவில்லை. இப்போதாவது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக குற்றச்சாட்டுக்கு பதில்: இதனிடையே, மணிப்பூர் வன்முறையுடன், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநில சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசும் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பவன் கேரா, "இந்த மாநிலங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி, குற்றம் நடந்த இரண்டு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அது குடும்பச் சண்டை காரணமாக நடந்துள்ளது எனத் தெரிவந்துள்ளது. கல்லூரியில் நடந்த மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் ஏபிவிபி (பாஜகவின் மாணவர் அமைப்பு) உடன் தொடர்புடையவர்கள்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் எப்போதாவது பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆதரவாக வருவதை பார்த்திருக்கிறீர்களா, ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் பேரணி நடத்தியதை நாடு முதல் முறையாக பார்த்தது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாஜக ஆளும் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணகாப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.
முடங்கிய நாடாளுமன்றம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு அரசு மணிப்பூர் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறது. எப்போது விவாதிக்க வேண்டும் என்பதை சபாநாயகர் முடிவு செய்வார் என்று ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது. இந்த அமளியால் நாடாளுமன்றம் தொடங்கிய முதல் இரண்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற முடக்கம் குறித்த எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பிரமோத் திவாரி, "பொய் கூறுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. நாங்கள் தினமும் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி வருகிறோம். மற்ற எல்லா அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு நாள் முழுவதும் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். அரசோ அவர்களுக்கு வசதியான நாளில் குறுகிய நேரத்தில் விவாதம் நடத்த அனுமதி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...