Published : 22 Jul 2023 11:57 AM
Last Updated : 22 Jul 2023 11:57 AM

மணிப்பூர் அதிர்ச்சிகள்: அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரின் வீடுகளை ஆவேசத்துடன் இடிக்கும் பழங்குடியின பெண்கள்

இம்பால்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மூன்று பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், மே 6-ம் தேதி 45 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது எரிந்த உடலின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 3-ம் தேதி கலவரம் தொடங்கியதில் இருந்து அங்கு பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளின் தொடர்ச்சியான சம்பவங்களில் இந்தக் கொடூரமும் ஒன்று.

கடந்த மே 4-ம் தேதி தெளபால் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஜூலை 19-ம் தேதி வீடியோ மூலம் வெளியாகி தேசத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாநிலத்தில் இணையத் தடை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையிலும், அந்தத் கொடூரம் வெளியே வந்துள்ளது. அந்த வன்கொடுமைத் தொடர்பாக இதுவரை 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெளபால் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஜூலை 20) மாநிலத்தில் ஆளும் பாஜகவின் 7 பேர் உள்ளிட்ட 10 குகி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏகள், மே 3-ம் தேதியில் இருந்து அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட நான்கு சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பெண் எரித்து கொலை: பெரிய கலவரக் கும்பல் ஒன்று கிராமத்தைத் தாக்கி அழித்த அடுத்த நாள், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரின் பாதி உடலை தான் பார்த்தாக, பீடைச்சிங் கிராமத்தின் பாதிரியார் தியானா வைபேயி சவுன்டாக் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார். ராணுவத்தினரின் பாதுகாப்புடன் அவர் கிராமத்துக்குள் சென்றிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அந்தப் பெண்ணின் உடல் பாதி எரிந்திருந்தது. அவர் ஆடையின்றி இருந்தார். அவரது உடலை இம்பால் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். இப்போது, அந்த உடல் எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. மே 6-ம் தேதி கிராமத்துக்குள் நுழைந்த அந்தக் கும்பல் கறுப்பு உடைகள் அணிந்திருந்தனர். மணிப்பூர் மாநில கமாண்டோ வீரர்களும் அவர்களுடன் இருந்தனர்.

கொலை செய்தனர், சிதைத்தனர்: எங்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின்னர் கிராமத்தில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தனியாக வாழ்ந்து வந்த ஒரு பெண்ணால் ஓடி வெளியேற முடியவில்லை. கலவரக் கும்பல், அவரைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள், அவரை கொலை செய்து உடலைச் சிதைத்தனர். இதுகுறித்து நான் அளித்த புகாரின்படி, காங்போக்பி மாவட்ட காவல் நிலையத்தில் கலவரம், கொலை செய்தல், தீ வைத்தல் போன்ற குற்றங்களுக்காக ஜூரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

க்ஷ்போலீஸார் எங்களுக்கு உதவுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். மாறாக, அவர்கள் எங்களை நோக்கிச் சுட்டனர். கிராமத்தின் தன்னார்வலர்களும் ஓடிவிட்டனர். அது ஒரு கொடூரமான சூழ்நிலை. இதற்கு முன் அப்படி ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை" என்று அந்த பாதிரியார்தெரிவித்தார்.

தீக்கிரையாக்குதல்: காங்போக்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு ஜூரோ எஃப்ஐஆர் தகவலின்படி, மே 4-ம் தேதி, கிழக்கு இம்பாலில் இரண்டு பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்கள் கிழக்கு இம்பாலில் உள்ள கார்கள் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் வேலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், "கோனுங் மாமாங் அருகே உள்ள அவர்களின் வாடகை வீட்டில் 100 முதல் 200 பேர் கொண்ட கும்பல்களால் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்களின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த தாய் வேதனையாக தெரிவித்துள்ளார்.

இந்த எஃப்ஐஆர் பின்னர் மே 16-ம் தேதி போரோம்பட் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது குறித்து அடையாளம் தெரியாத குற்றவாளிகளுக்கு எதிராக, உள்நோக்கத்துடன் தாக்குதல், கடத்தல், கொலை செய்வதற்காக கடத்துதல், தவறாக மறைத்து வைத்தல், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தல் போன்ற குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5-வது நபர் கைது

கார்கில் போர் ராணுவ வீரர் வேதனை: இதனிடையே, மணிப்புர் அதிர்ச்சி வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்திய ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட்டின் சுபேதாராக பணியாற்றியவர். உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, "நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனைவியையும், என் சக கிராமத்தினரையும் காப்பாற்ற முடியவில்லையே" என்றார் வேதனையாக.

மேலும் அவர், “துக்ககரமான அந்த மே 4-ம் தேதி கிராமத்தில் பல வீடுகளை எரித்து இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கிராமத்து சாலையில் பலர் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றது. இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது போலீசார் அங்கே இருந்தனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. வீடுகளுக்கு தீ வைத்து பெண்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x