Published : 21 Jul 2023 09:41 PM
Last Updated : 21 Jul 2023 09:41 PM
புதுடெல்லி: சென்னையின் எண்ணூரில் எரிவாயுக் குழாய் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கு காரணத்தால், அந்தப் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை என்று மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி கூறியுள்ளார்.
தேசிய எரிவாயு குழாய் தொகுப்பு பணியின் மீது வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி அளித்த பதில் பின்வருமாறு: “ஒரே இந்தியா ஒரே எரிவாயு தொகுப்பு” என்ற கொள்கை அடிப்படையில் தேசிய அளவிலான எரிவாயுக் குழாய் தொகுப்பு அமைத்திட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் மத்திய அரசினால் பணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வண்ணம் 33,592 கிலோமீட்டர் நீளம் கொண்ட குழாய் தொகுப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 23,173 கிலோமீட்டர் அளவுக்கு பல்வேறு எரிவாயுக் குழாய் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 12,202 கிலோமீட்டர் நீளம் குழாய்கள் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் நிதி உதவியைப் பொறுத்தவரை, குழாய் தொகுப்பு அமைத்திடும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டும் நோக்கில் இதுவரை ரூபாய் 10,735 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, வடகிழக்கு மாநிலங்கள் குழாய் தொகுப்பு மற்றும் மேற்கு வங்காளம் - ஒடிசா குழாய் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எரிவாயு குழாய் திட்டம்: தற்போது குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் 12,202 கிலோமீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தைப் பொறுத்த வரையில் எண்ணூர் மற்றும் ஆந்திராவின் நெல்லூர் இடையே 160 கிலோ மீட்டர் குழாய் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இத்திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏனைய எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டங்கள் அனைத்தும் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
இந்தியன் ஆயில் கழகம் செயல்படுத்தும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் - ராஞ்சி குழாய் திட்டம் மட்டும் 2026-ல் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT