Published : 21 Jul 2023 06:20 PM
Last Updated : 21 Jul 2023 06:20 PM
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை நிகழ்த்துவதற்கு முன்பு காங்போக்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்துக்கு வந்த அந்த ஆயுதமேந்திய கும்பல், வீடுகளை கொள்ளையடித்து, தீவைத்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, பலரைக் கொலை செய்தது என்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அதில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதைத் தடுக்க முயன்ற அவருடைய அண்ணனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றதாகவும் அந்த எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஏகே ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர் (தனியங்கி துப்பாக்கி), ஐஎன்எஸ்ஏஎஸ் மற்றும் 303 ரைபில் போன்ற நவீன ரக ஆயுதங்களுடன் சுமார் 900 முதல் 1000 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்கள் கிராமத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது. சைகுல் காவல் நிலையத்தில் இருந்து 68 கி.மீ. தொலைவில் காங்போக்பி மாவட்டத்தில் ஒரு தீவு போல ஒதுங்கி இருக்கிறது அந்த கிராமம்.
அந்த வன்முறைக் கும்பல் எல்லா வீடுகளையும் சேதப்படுத்தி, அதிலிருந்த அசையும் சொத்துகளை சூறையாடி, பின்னர் தீ வைத்தது. பணம், வீட்டு உபயோக பொருள்கள், மின் சாதனங்கள், தானியங்கள், கால்நடைகளை அந்தக் கும்பலில் இருந்தவர்கள் எடுத்துச் சென்றனர். அந்தக் கும்பல் அருகில் உள்ள காட்டில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட 5 பேரைக் கடத்திச் சென்றது" என்று அந்த எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மே 4-ம் தேதி நடந்தது. இது தொடர்பாக ஜூன் 21-ம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ வீரரின் கதறல்: இதனிடையே, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரது கணவர் கார்கில் போரில் போராடிய ராணுவ வீரர். உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, "நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனைவியையும், என் சக கிராமத்தினரையும் காப்பாற்ற முடியவில்லையே" என்றார் வேதனையாக.
மேலும் அவர், “துக்ககரமான அந்த மே 4-ம் தேதி கிராமத்தில் பல வீடுகளை எரித்து இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கிராமத்து சாலையில் பலர் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றது. இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது போலீசார் அங்கே இருந்தனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. வீடுகளுக்கு தீ வைத்து பெண்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.
இதனிடையே, மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார். | அதன் விவரம்: “மணிப்பூர் வன்கொடுமைகளை மும்முறை விசாரித்தும் அதிகாரிகள் பதில் தரவில்லை” - தேசிய மகளிர் ஆணைய தலைவர்
திரிணமூல் காங். எழுப்பிய கேள்வி: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகும் வரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காத காரணம் தொடர்பாக கேள்விகளை அடுக்கியுள்ளார் திரிணமூல் காங்கிஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே. | வாசிக்க > மணிப்பூர் வன்கொடுமை: 78 நாட்களாக போலீஸ் காத்திருக்க யார் காரணம்? - திரிணமூல் காங். கேள்வி
இந்தச் சூழலில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். | பார்க்க > மணிப்பூர் கொடூரம் - வலுக்கும் நாடு தழுவிய கண்டனப் போராட்டங்கள் | புகைப்படத் தொகுப்பு
மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT