Published : 21 Jul 2023 04:18 PM
Last Updated : 21 Jul 2023 04:18 PM

“மணிப்பூர் வன்கொடுமைகளை மும்முறை விசாரித்தும் அதிகாரிகள் பதில் தரவில்லை” - தேசிய மகளிர் ஆணைய தலைவர்

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா | கோப்புப்படம்

புதுடெல்லி: மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்றுசேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பாக ஜூன் 12-ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் வந்தது என்று சில ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பதில் அளிக்கும் விதமாக ரேகா சர்மா இவ்வாறு தெரிவித்தார். மணிப்பூரில் மே 4-ம் தேதி நடந்த அந்தச் சம்பவம் குறித்த வீடியோ ஜூலை 19-ம் தேதி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மணிப்பூர் சம்பவம் குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று மறுத்துள்ள மகளிர் ஆணையத் தலைவர், அது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, அது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், மணிப்பூர் பெண்கள் பிரச்சினை தொடர்பாக வேறு சில புகார்கள் தனக்கு வந்தது. அதுகுறித்து மூன்று முறை மணிப்பூர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டி இருந்தது, புகார்கள் மணிப்பூரில் இருந்து வரவில்லை. சில புகார்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தன. இருந்தாலும் நாங்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தோம், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. என்றாலும், நேற்று முன்தினம் மணிப்பூர் வன்கொடுமை (ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றது) தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளோம்" என்றார். மேலும், அதிகாரிகளுக்கு தான் எழுதிய கடிதங்களையும் அவர் வெளியிட்டார். அந்தக் கடிதங்கள் மே 18, 19 மற்றும் ஜூன் 19-ம் தேதிகளில் எழுதப்பட்டிருந்தன.

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று மே 4-ம் தேதி நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். சுமார் 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே மாதம் எடுக்கப்பட்ட அந்த வீடியோ மாநிலத்தில் இணையத் தடை நீக்கப்பட்டதும் ஜூலை 19-ம் தேதியே பகிரப்பட்டு அதிச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங். எழுப்பிய கேள்வி: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகும் வரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காத காரணம் தொடர்பாக கேள்விகளை அடுக்கியுள்ளார் திரிணமூல் காங்கிஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே. | வாசிக்க > மணிப்பூர் வன்கொடுமை: 78 நாட்களாக போலீஸ் காத்திருக்க யார் காரணம்? - திரிணமூல் காங். கேள்வி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x