Published : 21 Jul 2023 02:52 PM
Last Updated : 21 Jul 2023 02:52 PM

உத்தராகண்ட் மின் விபத்து | கழிவுநீர் சுத்திகரிப்பு பராமரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவு

உத்தராகண்ட் விபத்து | கோப்புப்படம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் புதன்கிழமை மின்மாற்றி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை பராமரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவினைத் தொடர்ந்து உத்தராகண்ட் பவர் கார்பரேஷனைச் சேர்ந்த கூடுதல் உதவிப்பொறியாளர் ஹர்தேவ் லால், இளநிலை பொறுப்பு பொறியாளர் குந்தன் சிங் ராவத் ஆகியோர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமோலி மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "சமோலி மாவட்டத்திலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த விபத்துச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அச்சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வரின் உத்தரவினைத் தொடர்ந்து கழிவு நீர் திட்டப்பணிகளை பராமரித்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு இன்று செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதனிடையே, உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ்.எஸ்.சாந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து திட்டப்பணியிடங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள மின் இணைப்பு அமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், "அனைத்து திட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் மின் இணைப்பு அமைப்புகளை தாமதமின்றி ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அனைத்து செயலாள்கள் அறிவுத்தப்படுகிறார்கள். இதனை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது பாதுகாப்பு நிறுவனம் கூறிய காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், அலக்நந்தா ஆற்றங்கரையில் நாம்னே கங்கே நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் புதன்கிழமை திடீரென வெடித்து சிதறியது. இதனால் மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டு இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 16 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணத் தொகையாக தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x