Published : 21 Jul 2023 04:02 AM
Last Updated : 21 Jul 2023 04:02 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மணிப்பூர் விவகாரத்தால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றுமக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மக்களவை கூடியதும், மறைந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துஅவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலில் மக்களவை கூடியதும்மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “மக்களவையை சுமுகமாகநடத்த எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்புதரவேண்டும்’’ என்றார். இதை ஏற்கமறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதன்காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய மக்களவை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மாநிலங்களவையில் அமளி: மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், மறைந்த உறுப்பினர் ஹார்டுவர் துபேக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,பகல் 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார். அவர் கூறும்போது, “அவையின் அனைத்து அலுவல்களையும் ரத்து செய்துவிட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்’’ என்றார்.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறும்போது, “எதிர்க்கட்சி தலைவர் திடீரென எழுந்து, விவாதம் நடத்த வேண்டும் என்றுவலியுறுத்த முடியாது. விதிகளைப் பின்பற்றியே அவை நடத்தப்படும்’’ என்று கூறினார்.
திரிணமூல் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசும்போது, “விதி 267-ன் கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி எங்கு இருக்கிறார். மணிப்பூர் விவகாரம் குறித்து இந்த அவையில் அவர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவுஉறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி பேசும்போது, “மணிப்பூரில் 2 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்த நாட்டையும் தலைகுனிய வைத்திருக்கிறது. நாங்கள் மணிப்பூர்பெண்களுக்காக குரல் கொடுப்போம். பிரதமர் மோடி அவைக்கு வந்து இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.
ஆம் ஆத்மி உறுப்பினர்கள் சஞ்சய்சிங், ராகவ் சதா, ராஷ்டிரிய ஜனதாதளத்தின் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தினர். அமளி அதிகமானதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் கூடியபோதும், மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சியினர் எழுப்பியதால், நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பாஜக குற்றச்சாட்டு: செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “விதிகளைப் பின்பற்றி, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. இரு அவைகளையும் முடக்குவதை குறிக்கோளாக கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற விவகாரத் துறைஅமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “மணிப்பூர் விவகாரம் உணர்வுபூர்வமானது. இதுகுறித்து எப்போது விவாதிக்க வேண்டும் என்பதை அவைத் தலைவர் தீர்மானிப்பார். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல்முடக்குகின்றன’’ என்றார்.
நாங்கள் தலையிடுவோம் - தலைமை நீதிபதி எச்சரிக்கை
மணிப்பூர் வீடியோ விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வு நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. அப்போது, அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை அழைத்து நீதிபதி சந்திரசூட் கூறியபோது, ‘‘வன்முறையை தூண்ட, பெண்களை கருவியாக பயன்படுத்தியது ஏற்கக்கூடியது அல்ல. இது அரசியல் சாசனம், மனித உரிமைகளை மீறும் செயல். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு குறுகியகால அவகாசம் வழங்குகிறோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT