Published : 20 Jul 2023 06:55 PM
Last Updated : 20 Jul 2023 06:55 PM

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு டெல்லியில் வரவேற்பு

புதுடெல்லி: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ள ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபராக கடந்த ஆண்டு ஜூலையில் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது.

இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு தொடங்கப்பட்டதன் 75-ம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளித்து அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய திட்டமாக மாற்றியுள்ள ரணில் விக்ரமசிங்கே, அமெரிக்க டாலருக்கு இணையானதாக இந்திய ரூபாயின் பயன்பாடு இருக்க வேண்டும் என விரும்புவதாக கடந்த வாரம் கூறி இருந்தார்.

ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், "அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை எனும் இந்திய வெளியுறவுக் கொள்கையின்படி இலங்கை இந்தியாவுக்கு முக்கிய பங்குதாரர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதை ஊக்குவிப்பதாகவும் இலங்கை அதிபரின் இந்த பயணம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கை, கடந்த ஆண்டு முதல்முறையாக முன் எப்போதும் இல்லாத பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதன் அந்நியச் செலாவணி வெகுவாகக் குறைந்தது. இலங்கை அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வர தேவையான பொருளாதார உதவிகள், கடன் உதவிகள் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவையும் கடனாக வழங்கப்பட்டன. மேலும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் உதவி வழங்கவும் இந்தியா காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x