Published : 20 Jul 2023 06:15 PM
Last Updated : 20 Jul 2023 06:15 PM
இம்பால்: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொதித்தெழுந்த பழங்குடியினர் நீதி கேட்டு போராட்டம் நடத்த வீதிகளுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹிராதாஸ் (32) என்ற அந்த நபர் வியாழக்கிழமை தௌபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்றும் மணிப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் உள்ள பிற நபர்களைப் பிடிக்க 12 குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியான நிலையில், மனிதாபிமானமற்ற முறையில், அவமரியாதை செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்காக எனது இதயம் கலங்குகிறது" என்று தெரிவித்துள்ள மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், "குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன். இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு நமது சமூகத்தில் இடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேதனை: இந்த துயர்மிகு சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் காட்டம்: தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோ, உச்ச நீதிமன்றத்தையும் கிளர்ந்தெழச்செய்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, "விரோதத்தை தீர்த்துக்கொள்ள பெண்களை வன்முறையின் கருவியாக பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பு ஜனநாயகத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுப்போம்" என்று சம்பவத்துக்கான தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இந்தப் பின்னணியில், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், "கொலைவெறியுடன் எங்கள் கிராமத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பலில் போலீசாரும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் என்ற கிராமத்தில் வாழும் குகி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பெண்கள். இவர்களில் ஒருவருக்கு 20+ வயதும், மற்றவருக்கு 40+ வயதும் ஆகிறது. மைதேயி சமூகத்தவர்களை பழங்குடி பட்டியல் சமூகத்தவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை எதிர்த்து குகி பழங்குடி மக்கள் சார்பில் மே 3-ம் தேதி மாபெரும் பேரணி நடைபெற்றதை அடுத்து, மே 4-ம் தேதி பி பைனோம் கிராமத்துக்குள் நுழைந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், அங்கு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரின் தந்தையும் சகோதரரும் அந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதையடுத்து, அந்த கும்பல் இரண்டு பெண்களையும் நிர்வாணப்படுத்தி வயல்வெளிக்கு இழுத்துச் சென்று அங்கு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கொடூர வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து வரும் மைதேயி - குகி இனக் கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூர்சந்த்பூர் ஒன்றாகும். காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி கடந்த மாதம் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக சென்றார். இந்த சூரசந்த்பூருக்கு செல்லும் வழியில்தான் அவரது வாகனம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகளில் சில...
ஸ்மிருதி இரானி - மத்திய அமைச்சர்: “மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை வெறிச்செயல் மனிதாபிமானமற்றது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உடன் பேசினேன். தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்” என ட்வீட் செய்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே - காங்கிரஸ் தலைவர்: “மணிப்பூரில் மனிதம் மாண்டுவிட்டது. மோடி அரசும், பாஜகவும் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் வன்முறை வெறி ஆட்டமாக மாற்றி உள்ளனர். பிரதமர் மோடியின் ஆழ்ந்த அமைதியை இந்தியா மறக்காது, மன்னிக்காது. இப்போதும் அடுத்தவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி - முன்னாள் காங்கிரஸ் தலைவர்: “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்றத் தன்மைதான் மணிப்பூரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தியா அமைதியாக காக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி.”
மு.க.ஸ்டாலின் - தமிழக முதல்வர்: “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர வன்முறை செயலின் வீடியோவை பார்த்து மனம் உடைந்து போயுள்ளேன். இந்த வெறுப்பும், விஷமும் சார்ந்த பிரச்சாரம் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இந்த அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, சிறந்த சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்.”
ப.சிதம்பரம் - காங். மூத்த தலைவர்: “பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்த தனது மவுனத்தை கலைத்துவிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏதோ ஒன்றை திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அவர் செல்லும்போது மணிப்பூர் மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. எது அவரை மணிப்பூரை நினைத்துப் பார்க்க தூண்டியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சொல்ல முடியாத கொடூரத்தின் வீடியோவா? மணிப்பூரில் நடந்த மனித உரிமை மீறல்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதா? முதலில் பிரதமர் செய்யவேண்டியது, மணிப்பூரில் மதிப்பிழந்த முதல்வர் பிரேன் சிங் ஆட்சியைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதுதான்.”
குஷ்பு - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்: “இந்தக் கொடூர குற்ற செயலை செய்தவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். அந்த ஆண்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வகுப்புவாத கலவரங்கள், குடும்பச் சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல், பழிவாங்குதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள், பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். மனிதாபிமானமற்ற மனிதர்களின் செயல் இது” என தெரிவித்துள்ளார்.
கலவரத்தின் பின்னணி: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர். சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT