Published : 20 Jul 2023 03:26 PM
Last Updated : 20 Jul 2023 03:26 PM

“மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடியின் மவுனத்தை கலைத்தது எது?” - ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நினைக்கத் தூண்டியது எது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்த தனது மவுனத்தை கலைத்துவிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏதோ ஒன்றை திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அவர் செல்லும்போது மணிப்பூர் மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. எது அவரை மணிப்பூரை நினைத்துப் பார்க்க தூண்டியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சொல்ல முடியாத கொடூரத்தின் வீடியோவா? மணிப்பூரில் நடந்த மனித உரிமை மீறல்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதா? முதலில் பிரதமர் செய்யவேண்டியது, மணிப்பூரில் மதிப்பிழந்த முதல்வர் பிரேன் சிங் ஆட்சியைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வேதனை: முன்னதாக, வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

கொடூரச் சம்பவம்: மணிப்பூரில் பெண்களை வீதியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. நாட்டையே உலுக்கியுள்ள மணிப்பூர் பெண்கள் சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி அம்மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மே 18-ம் தேதி அன்று காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வீடியோ வெளியான பிறகுதான் அச்சம்பவமும், அதன் பின்புலமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தீரா வன்முறை: மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தக் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தற்போதுதான் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா பயணம்: முன்னதாக, மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைதேயி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் அங்கு வன்முறை தொடர்ந்தது. இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த அமித் ஷா தலைமையில் ஜூன் 24-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மணிப்பூர் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளது. | வாசிக்க > மணிப்பூர் கொடூரம் | “அரசு தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” - உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x