Published : 20 Jul 2023 04:03 AM
Last Updated : 20 Jul 2023 04:03 AM

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. மணிப்பூர் கலவரம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 23 நாட்களில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாளில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுப்பது வழக்கம். அதன்படி, டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 34 கட்சிகளை சேர்ந்த 44 தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடந்த மே 3-ம் தேதி ஏற்பட்ட மணிப்பூர் இன கலவரம் தொடர்கதையாக உள்ளது. இந்த கலவரத்தில் மொத்தம் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ‘‘மணிப்பூர் கலவரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி, முதல் நாளில் (இன்று) ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளோம்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘‘மாநில கூட்டாட்சி அமைப்பு மீது ஆளுநர்கள் மூலமாக மத்திய அரசு தாக்குதல் நடத்தும் பிரச்சினை, இந்த கூட்டத்தொடரில் எழுப்பப்படும். மேலும், மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, ஜிஎஸ்டி வரி நெட்வொர்க்கை நிதி மோசடி தடுப்பு சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். அதானி நிறுவன விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தும்’’ என்றார்.

மத்திய அரசு தயார்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு நாடாளுமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ‘‘எதிர்க்கட்சிகளிடம் இருந்து முக்கிய ஆலோசனைகளை பெற்றுள்ளோம். 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மணிப்பூர்விவகாரம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

ஆளுநரை திரும்ப பெற நோட்டீஸ்: டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஆம் ஆத்மி எம்.பி.சுஷில் குமார் ரிங்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கிள்ளன. இதற்கு போட்டியாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில்40 கட்சிகள் பங்கேற்றன. இந்தசூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று பரபரப்புடன் தொடங்குகிறது.

பல்வேறு மசோதாக்கள்: டெல்லி அவசர சட்ட மசோதா, தபால்சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா,தேசிய பல் ஆணைய மசோதா, பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா உட்பட 21 மசோதாக்கள் இந்தகூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படஉள்ளன. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வனப் பாதுகாப்பு திருத்த மசோதா, உயிரியல் மாறுபாடு திருத்த மசோதா உள்ளிட்டமசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x